முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Thursday, June 5, 2008

ஈழத்தமிழரின் தொன்மை

ஈழம், இலங்கை, லங்கா,சிறீலங்கா, சீலான், சீலாவோ,சிலோன் முதலிய பல்வேறு பெயர்களைக் கொண்ட நாடு இந்துப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறு தீவாகும். இத்தீவு இந்தியா அல்லது பாரதம் எனப்படும் ஒரு பெருநாட்டின் கீழ்பகுதியல் அதனோடு ஒரு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்துள்ளது. ஈழத்தில் தமிழர், சிங்களவர் என்ற இரு மொழிபேசும் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு நெருங்கிய தொடர்புகொண்ட மக்களே இந்தியாவிலும் வாழ்கின்றனர்

இவ்விரு நாடுகளும் 4300 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஒரு பெருநாட்டின் பகுதிகளாக இணைந்து இருந்தன. மூன்று முறை நிகழ்ந்த கடல் பரவலின்முன் கடலற்ற பகுதியில் தெற்குநோக்கிப் பரந்த பெருநாடக இருந்தது. ஞாயிறினின்று சிதறி விழுந்த அனற்பிழம்பே பின் பூமியானது. அதில் முதலில் குளிர தொடங்கிய நிலம் பற்றிப் பேராசிரியர் மது. ச. விமலானந்தம் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....”

- தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.

இவ்வாறு தோன்றிய பரந்த தமிழ்நாடு பெருமளவில் கடல்கோளுக்குட்பட்டது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இப்பேரழிவைப் பின்வருமாறு பாடுகின்றார்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குமரிக் கோடுங்
கொடுங்கடல் கொள்ள"

இறையனார் களவியலுரையும் இளம்பூரணர் தொல்காப்பிய உரையும் பிறவும் இக்கடல் கோளைக் குறிப்பிடுகின்றன. தமிழ்நிலத்தின் தென்பகுதி கொடிய கடலாற்கொள்ளப்பட்ட போதிலும் நிலைபேறடைந்த வடபகுதி தமிழை அழியாது காத்தது. இந்த வடபகுதி இன்றைய தென்தமிழ்நாடு மட்டுமன்று அதற்கு மேலேயிருந்த வடபகுதியுமாகும். இப்பேரழிவில் அழியாது தப்பிய தமிழ்பகுதியாக ஈழமும் அமைந்தது. தொடர்ந்த இக்கடல்கோளைப் பேராசியர் மா. இராசமாணிக்கனார் பின்வருமாறு விளக்குகின்றார்.

“இலங்கை வரலாற்றில் குறிப்பிடப்படும் மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இது இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தது, இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. இரண்டாம் கடல்கோளில் பேரழிவு நிகழவில்லை. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் நிகழ்ந்தது. இக்காலத்தில் தேவநம்பியதீசன் இலங்கையை ஆண்டான். இது பாரதவரலாற்றில் அசோகன் காலமாகும். இம்மூன்றாவது கடல்கோளினால் ஒரு நூறாயிரம் (இலட்சம்) கிராமங்களும் தொளாயிரத்துப் பத்து மீனவர் சிற்றூர்களும் முத்துகுளிப்போர் வாழ்ந்த நானூறு ஊர்களும் கடலுள் மூழ்கின... இறையானர் அகப்பொருள் உரையில் ஒரு கடல்கோள் தென்மதுரையையும் அழித்தன என்று குறிப்பிட்டார்.”

The Date of Tolkappiyam,
Annals of Oriental Research,
University of Madras
Vol.XIX part II, 1964, Reprint p. 16-17


மேற்கூறிய கருத்தின்மூலம் பெருந்தீவாக இருந்த ஈழம் சிறிய தீவானது எனலாம்

இப்பேரழிவு பற்றி விளக்கம் மது.ச. விமலானந்தம் பின்வருமாறு மேலதிக விளக்கம் தருகிறார்.

“கடல்கொண்ட இதே சமயத்தில்தான் கடலுள் அமிழ்ந்து கிடந்த இமயம் மேலெழுந்தது. தெற்கே கடல்கொள்ள வடக்கே நீர்வடிந்து இமயம் தோன்றியது.”

மேலது.ப.1671

இப்பரந்த குமரிக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழர் வாழ்ந்த நாடாகும். இத் தொடர்பினாலேதான் பின்வந்த ஆரியமொழியின் தாக்கத்தால் இந்தியாவின் மேற்பகுதி ஆரிய நாடாக, தென்பகுதியின் தமிழ்மொழி ஆரியத்தாக்கத்தால் பல திராவிடமொழிகளானது. (மலையாளம், சிங்களம்......)மேலே குறிப்பிட்ட திராவிட மொழிகள் மட்டுமன்றி ஆரியமொழிகளும் தமிழ்ச்சார்புடைய திராவிட மொழிகளே என்பது தமிழக மொழியில் அறிஞர் முனைவர்கு அரசேந்திரன் கருத்தாகும் அது வருமாறு.

“இந்திய ஆரியமொழிகள் என்பன உண்மையில் கொடும் திராவிட மொழிகளே. ஆரியர் இந்தியம் புகுந்த கி.மு. 1500 இன் முன் இந்தியா முழுமையும் வழங்கிய மொழி தமிழே. தமிழ் மிகப்பல கிளைமொழிகளாக வடக்கே செல்லச்செல்ல திரிந்துபோயிற்று. பாவாணர், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் போன்றோர் இவற்றை விளக்கியுள்ளனர். வடவிந்திய மொழிகளை உடைத்துப்பார்த்தால் அவற்றின் உள் ஊற்றாகத் தமிழ் இருப்பது தெரியும். இந்த உண்மை உலகிற்கும் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் தமிழின் வன் கொடுத்திரிபான சமற்கிருதக் கந்தற்பாய் இந்திய மொழிகளின் மேல் பரப்பட்டிருப்பதேயாகும்.”

-தமிழால் தழைத்த சிங்களம். ப.77

ஈழம் என்பது முழுமையும் தொன்மையான தமிழ்ஈழம் என்பது இதுவரை கூறியவற்றால் புலனாகும். ஈழத்தில் சிங்களம் ஒரு மொழியாக உள்ளது. இது பொதுவாக ஆரியமொழியென்று சிங்கள மக்களால் கூறப்படுகிறது. இது பொருத்தமான கருத்தா என்பது ஆராயப்படவேண்டும். தென்னிலங்கையின் தொன்மையான வரலாற்றை ஆராய்வதன்மூலம் இதன் உண்மை தெளிவாகும்.

தென்னிலங்கையின் தொன்மையான வரலாற்றை கூறும் இரண்டு பாளி நூல்கள் முதலில் எழுந்தன. அவற்றுள் ஒன்று பலர் தொடர்ந்தும் எழுதியாதகக் கருதப்படும் தீபவம்சம் (கி.பி.4). இரண்டாவது நூல் மாகாநாயக தேரர் என்ற பௌத்தபிக்கு எழுதிய மகாவம்சம் (கி.பி.6). மகாவம்ச நூலாசிரியர் அதன் முன்னோடி நூல்பற்றிப் பின்வருமாறு “புத்தர் வருகை” என்ற முதல் இயலின் தொடக்கத்தில் கூறுகின்றார்.

“.... எவ்விதத்திலும் குறையில்லாததும் எல்லாம் நிறைந்ததுமான மகாவம்சத்ததைக் கூறத் தொடங்குகின்றேன்.

புராதன முனிவர்களால் தொகுக்கப்பெற்ற அது (மகாவம்சம்) இங்கே விரிவாக கூறப்பட்டுள்ளது. பழையநூல் சுருக்கமானது.பல இடங்களில் ஒரே விஷயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டுள்ளது.

இப்போது சொல்வது அத்தகைய குறைகள் இல்லாதது.

- ப.9.

மகாவம்சம் முதல் ஐந்து இயல்களிலும் புத்திரின் மூன்று வருகை பற்றியும் பௌத்தமதம் பற்றியுமே கூறுகின்றது. ஆறாவது இயல் “விஜயன் வருகை” என அமைந்துள்ளது. தொடர்ந்து அரசர்கள் வரலாறும் பௌத்தசமய வளர்ச்சியும் கூறப்படுகின்றன. இந்நூலின் காவிய நாயகர் துட்டகைமுனு (துட்டகா மணி). விஜயன் முதல் மகாசேனன் வரை (கி.மு.543 – கி.பி. 302) பதினான்கு அரசர் வரலாறு கூறுகின்றது. முதலாவது இயலில் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் யார்கள், நாகர்கள் என்று கூறப்படுகின்றனர். விஜயன் இயக்கர் மரபைச் சேர்ந்த இளவரசி குவன்னா (குவேனி ) என்பவளை மணந்து அரசனானான். பின் தமிழகப் பாண்டிய மன்னனுடைய மகளை மணந்தான். குவேனி கொல்லப்பட்டாள். புத்தர் நாகதீபம் வந்து பௌத்தக் கோட்பாட்டைப் பரப்பியதும் கூறப்படுகின்றது. நாகதீபம் இலங்கையின் வடமேற்குப் பகுதி என்றும் யாழ்ப்பாணம் என்றும் வரலாற்று அறிஞர்களால் விளக்கப்படுகின்றது. மகாவம்சத்தின் காவிய நாயகர் துட்டகைமுனு (கி.மு. 164 – 140) ஈழத்துத் தமிழ் அரசனான எல்லாளனை (கி.மு.204 – 164)வென்ற செய்தி முதல் இயலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

“துட்டகாமணி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது இந்த இடத்திற் தங்கியிருக்க நேரிட்டது.”

அசோகன் காலத்தில் ஈழத்தைத் தேவநம்பியதீசன் (கி.மு. 307 – 266) ஆண்டான். புத்தர் காலத்தில் புத்தர் மூலமே பௌத்தம் ஈழத்திற்கு வந்தது என்று கூறப்பபட்டபோதிலும் அசோகன் காலத்திலேயே பௌத்தம் இலங்கைக்கு வந்தது என்பது வரலாற்று அறிஞர் கருத்தாகும். இக்காலத்தில் வடஇந்தியாவிலும் தென்னிந்தியத் தமிழகத்திலும் தென்னிலங்கையிலும் நாகதீபத்திலும் பௌத்தம் பரவியது. இக்காலத்தில் பாளி மொழிமூலம் பௌத்தம் பரவியது. தீபவம்சம்,மாகாவம்சம், சூளவம்சம் ஆகிய பௌத்த நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்டன. எனினும் தமிழகத்திலும் தமிழீழத்திலும் தமிழ் மூலமே பௌத்தம் பரவியது. மணிமேகலை நூல் இதற்குச் சான்றாகும்.

ஈழத்தில் இன்று தமிழ்,சிங்களம் என்ற இருமொழிகள் வழக்கில் உள்ளன. எனினும் கி.மு.1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ் மொழியும் திராவிட மொழியும் இருந்தன. இதனைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் பின்வருமாறு விளக்குகின்றார்.

“....தமிழ்க் குடியேற்றத்தின் பழைமை..... தற்போதைய ஆய்வுகள், அதுவும் பன்முகப் பார்வையில் கிடைத்துள்ளன சான்றுகள் இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக் முன்னரே, சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ்மொழி பேசுவோரும் தற்காலச் சிங்களமொழி பேசுவோரின் மூதாதை மொழியாகிய தமிழின் கிளைமொழியாகிய எலு மொழி பேசுவோரும் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன. இன்னொரு கோணத்தில் நோக்கும்போது தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 3ம் ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் செந்தமிழும் கொடுத்தமிழும் காணப்பட்டதுபோன்றே ஈழத்திலும் தமிழ் (செந்தமிழ்),எலு (கொடுந்தமிழ்) ஆகிய மொழிகள் காணப்பட்டன. எனலாம்.

பண்டைய ஈழத்தில் தமிழர் - ஒரு பார்வை, யாழ்பல்கலைக்கழகம். 200.ப.50.

தொல்காப்பியர் ஈழத்துத் தமிழறிஞர் என்ற கருத்து உள்ளது என்பதும் இங்கு கருதத்தக்கது.

ஈழத்து ஆதிக்குடிகள் பற்றிய கருத்துக்கள் வரலாற்று நெறியில் அண்மையிலேயே சரியாகக் கூறப்படுகின்றன. எனினும் மேலே கூறப்பட்ட பாளி நூல்கள் ஆரியக் குடியேற்றத்தை விஜயன் கதைமூலம் ஐதீகமாக உருவகப்படுத்தியுள்ளன. நவீன சிங்கள வரலாற்றாசிரியர்கள் சிலர் விஜயன் கதையை ஏற்காது ‘இது தொடர்ந்து நிகழ்ந்த ஆரியர் குடியேற்றத்தைக் கற்பனை முறையில் கூறுவது” என நிராகரிப்பர். சிங்களம் ஆரியமொழி என்ற கருத்தை நிரூபிப்பதே இதன் நோக்கம். ஆனால் சிங்களம் திராவிடமொழி என்பதே பன்மொழி ஆய்வாளர் கருத்தாகும். மொழியில் அறிஞரான முனைவர் கு.அரசேந்திரன் “உண்மையில் சிங்களம் என்பது தமிழின் எழுபது விழுக்காட்டுச் சிதைந்த வடிவமே” என்பார். அவர் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சில சிங்களச் சொற்களை விளக்கியதோடு, “தமிழால் தழைத்த சிங்களம்” என்ற ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நூலில் இத்தொடர் ஆய்வை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

- (ப.81)

ஈழத்திலும் தமிழகத்திலும் பௌத்தமதம் பரவிய காலம் பெருங்காற் பண்பாட்டுக்காலம் என்று தொல்லியல் ஆய்வாளர்களால் ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது. இக்கால ஈழச் சாசனங்களையும் தொல்பொருள்களையும் ஆராய்ந்த வரலாற்றுத் தமிழ் அறிஞர்களான சி.க.சிற்றம்பலம், பொ.இரகுபதி,செல்லையா கிரு~ணராசா,பரமு பு~;பரட்ணம் முதலியோரும் எஸ். யூ.தெறணியகல முதலிய அறிஞர்களும் இவை தமிழ் சார்புடையவை என நிறுவியுள்ளனர் இக்கல்வெட்டுக்கள் பிராமிக் கல்வெட்டுக்கள் எனப்படுகின்றன. இவை பற்றிப் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் பின்வருமாறு விளக்குகின்றார்.

பௌத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் இவை சிங்கள மக்களின் ஆதிக்குடியேற்றத்திற்கான சான்றுகளாக மட்டுமன்றி, இவற்றிற் காணப்படும் பிராகிருத மொழி (ஒரு மதத்தின் மொழி) ஈழத்து மக்களின் மொழி எனவும் தவறாகக் கருதப்பட்டு வந்தது. இப்பிராமிக் கல்வெட்டுக்கள் பெருங்கற்கால மையங்களுக்குக் கிட்டக் காணப்படுவது மட்டுமன்றி இவற்றில் காணப்படும் குறியீடுகள், பெருங்கற்கால மக்களே பௌத்ததின் மொழியிலே பதியபட்டதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.”

பண்டைய ஈழத்தில் தமிழர்....2000.ப.47.

இச்சாசனங்களில் ஆரியப் பிரகிருத மொழியும் திராவிடப் பிராகிருத மொழியும் உள்ளன. இச்சாசன வரிவடிவங்கள் பின்வருமாறு பாகுபடுத்தப்பட்டுள்ளன.

1. பௌத்தத்துடன் வந்த வடஇந்திய வரிவடிவத்திற்கு முன்னர் வழக்கில் இருந்த வரிவடிவம். இது திராவிட வரிவடிவம் ஆகும். தமிழில் எழுதப் பயன்பட்டால் இது தமிழ்ப்பிராமி. இத்தகைய வரிவடிவமே தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் பௌத்தத்துடன் வந்த வடஇந்தியப் பிராமிவடிவத்துக்கு முன்னர் வழக்கிலிருந்தது.

2. பௌத்தத்துடன் ஈழம் வந்த வரிவடிவம். இதன் செல்வாக்கால் தமிழ்ப்பிராமி வழக்கொழிய (கி.பி.காலத்தில்) வடஇந்தியப் பிராமி வரிவடிவமே தென் ஈழத்தின் ஆதிப்பிராமி வரிவடிவாக வளர்ச்சி பெற்றது.

இவற்றின் அடிப்படையில் தமிழ், சிங்கள வேறுபாட்டிற்கு முந்திய நிலையை சி.க. சிற்றம்பலம் பின்வருமாறு முடிவுசெய்கிறார்.

“இப்பிராமி வரிவடிவத்தில் காணப்படும் குலஃ குழுப்பெயர்களான வேள், ஆய்,பதஃ பரத போன்றவையும் பருமக போன்ற பிற தமிழ்ப் பெயர்களும் தமிழை ஒத்த மொழி பேசியோரே இன்றைய தமிழ், சிங்கள மொழிகளின் மூதாதையினராக விளங்கினர். என்பதை உறுதி செய்கின்றன.”

தொன்மைத் தமிழில் வழங்கிய ஏழ் என்ற நாட்டுப்பெயரே பின் ஈழ, எல என மாறின என்ற கருத்து உள்ளது. ஈழ கல என மாறிப்பிள்ளை ஆகி, சிறீ என்ற சமஸ்கிருதச்சொல் சீ ஆகி சீகள ஆனது என்றும் இதுவே பின் சிகள, சிங்கள என மாறியதாகவும் கருதப்படுகிறது. இதேபோலவே இலங்கை லங்கா ஆகி பின் சமஸ்கிருத சிறீயுடன் சேர்ந்த சிறீலங்கா ஆனது என்றும் கருதப்படுகின்றது.

ஈழம் என்ற பெயர் தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இக் காலத்திலும் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவற்றுள் ஒன்று உணவு வணிகத் தொடர்பு. பட்டினப்பாலை என்ற சங்கத்தமிழ் நூலில்,‘ஈழத் துணவும் காளகத் தாக்கமும்’ என்ற வரி உள்ளது.

மேலும் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய சங்க நூல்களில் உள்ள ஏழு பாடல்களில் மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், ஈழத்துப் பூதன்தேவனார் என்ற சங்க புலவர் பெயர்களில் ஈழம் காணப்படுகின்றது. மேலே கூறப்பட்ட சான்றுகளின் அடிப்படையில்,ஈழம், குமரிக்கண்டம் என்ற குமரி நாடுகளில் ஒன்றாக இருந்தது. என்பதும் தமிழ் நிலமாக இருந்தது என்பதும் பின் கடல்கோளால் ஈழம் என்ற பெரிய தீவாகி, பின் சிறிய தீவானது என்பதும் உறுதியாகின்றது. அதனோடு இன்றைய தென்னிலங்கைச் சிங்களம் ஆரியமொழியன்று என்பதும் அது பாளிமூலம் தொடர்புகொண்ட முப்பது வீதம் ஆரியமும் நிலையான மொழியான எழுபதும் வீதத் தமிழ் கொண்ட, திராவிட மொழி என்பதும் உறுதியாகின்றது. எனவே, ஈழம் “திராவிட” நாடு என்பதும் உறுதியாகும்.

ஈழம் தமிழகமாகத் தொடர்ந்து இருந்ததனால் இங்கு தமிழ்க் கல்வி உயர்ந்த நிலையில் இருந்து பல புலவர்களும் பல நூல்களும் தோன்றியிருக்கும் என்பது உறுதி. ஆனால் இந்நூல்கள் எதுவும் இன்று எமக்குக் கிடைக்க வில்லை. தமிழகத்திலும் சங்ககாலத்தில் மிக அதிகநூல்கள் தோன்றியிருக்க முடியும் எனினும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பதினெட்டு நூல்கள் மட்டுமே கிடைத்தன. ஈழத்து அறிஞர்களான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை ஆகியோரே இவை அச்சுவடிவு பெற்றுத்தப்ப மூலகாரணமாய் இருந்தனர். ஆனால்,ஈழத்தில் தோன்றிய பழைய தமிழ் இலக்கியங்கள் தோன்றி அழிந்தன. என்பதே பொருந்தமாகும். இது பற்றிக் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

“தமிழ்நாட்டிற் சங்க இலக்கியங்கள் தோன்றிய காலகட்டத்திலே ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களும் இலக்கியங்களை ஆற்றியிருப்பார்கள். இப்புலவர்களின் ஆக்கங்கள் தொகுப்புபோர். தொகுப்பிப்போர் இன்றி நாளடைவில் அழிந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலமாகத்தாம் வாழ்ந்த சூழலிலே தம் பண்பாட்டுப் பின்னணியில் இலக்கியம் படைக்காத ஒரு சமூகத்தினைக் காண்பது அரிது. தமிழக உறவுகளும் தொடர்புகளும் மிக்கிருந்த நிலையிலே சிறபப்பானதோர் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் ஈழத்தில் நிலவியிருக்கும் என்று கருதுவது தவறாகாது.”

ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, திருநெல்வேலி தனலக்குமி புத்தகசாலை,2001.பக்.5-6

இதனை உறுதி செய்வதுதான் மேலே குறிப்பிடப்பட்ட ஈழத்துப் பூதன்தேவனாரின் சங்க இலக்கியக் கவிதைகள். எனினும் சிலர் இதனை ஏற்பதில்லை. அவருடைய பாடல்களில் ‘ஈழம்’ என்ற சொல் இல்லை என்பதே இவர்களுடைய கருத்துக்குக் காரணம். மேலே கூறப்பட்ட பேராசிரியர் மது.ச.விமலானந்தன் “ஈழம் என்பத இலங்கையைத்தான் குறிக்கிறதா? இவர் பாட்டினுள் ஈழம் பற்றிய குறிப்பும் இல்லை;. ஈழத் தமிழர் வரலாறு இவரிலிருந்தே தொடங்குகின்றது. தலைச்சங்க முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழநாட்டவர். நாகர் குடியினர். தொல்காப்பியரின் பிறப்பகம்கூட ஈழத்தில் உள்ளது எனறொரு ஆய்வும் உள்ளது. தமிழுணர்ச்சி குன்றிய காலத்தில் தமிழுக்கு அரும் பணியாற்றி, இலங்கைப் பழம்பெருமை வெளிகாட்டிய சிறப்பினர்.”

- மேலுது ப.1862 – 1863

தமக்கு ஏற்படும் ஐயத்தை அவர்களே மறுப்பதை இப்பகுதியிலேயே காணலாம். ஈழம் இலங்கையைத்தான் குறிக்கின்றது என்பது மேலே குறிப்பிட்ட சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. நாகதீவே நயினாதீவு என்ற கருத்தும், நாகதீவே யாழ்ப்பாணம் என்ற கருத்தும் உள்ளது. எனினும் முழு இலங்கையுமே நாகதீவு (நாகநாடு) எனப்பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமுளது. இது விரிவாக ஆராயப்படவேண்டும். குமரிநாடே நாகநாடு என்றபெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கும் ‘நாக’ என்ற பெயர் சான்றாகக்கூடும். “ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற பெருநூலைப் பேராசிரியர் ஆ.சதாசிவம் ஈழத்துப் பூதன்தேவனர் பாடல்களுடன் தொடங்குகின்றார். எனினும், முரஞ்சியூர் முடி நாகனாரை ஈழத்தவராக ஏற்று சங்ககாலப் பகுதியில் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. “வேறும் ஈழத்துப் புலவர் சங்கத்திலமர்ந்திருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.
(சாகித்திய மண்டலம், கொழும்பு, 1966,ப.1.)

சங்க கால இலக்கியங்களில் பூதன்தேவனார் என்ற பெயருடன் மூவர் இடம்பெற்றுள்ளனர் அவை வருமாறு.

1 மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்;
-நற்றிணை 366. அகநானூறு 231.307
குறுந்தொகை 189, 360

2 ஈழத்துப் பூதன்தேவனர்
- அகநானூறு 88, குறுந்தொகை 343.

3 பூதன்தேவனார்.
-நற்றிணை 80.

தமிழகத்திற் பூதன்தேவனார் என்று ஒரு புலவர் இருந்ததால் தமழீழத்தில் இருந்து சென்ற கவிஞரை அவரிலிருந்து வேறுபடுத்த ஈழத்துப்பூதன்தேவனார் என அவருக்கு அடைமொழி வழங்கப்பட்ட்டது என்பது அறிஞர்கள் கருத்து. ஈழத்துப்பூதன்தேவனார் எனப்பட்டார் என்பதும் அறிஞர் கருத்தாகும். எனினும் மூன்று பெயர்களையும் ஒப்பிட்டும்போது மூவரும் ஒருவர் என்று கருதுவதே பொருத்தமானது என்று தோன்றுகின்றது. இருவரும் ஒருவர் என்பதற்கு ஈழம் சான்றாக அமைந்தால் மூன்றாமவரை அவரிலிருந்து வேறுபடுத்த அவருக்கும் பெயர் முன் இடப்பெயர் சூட்டப்பட்டிருக்கவேண்டும். சாத்தனார் என்று சங்க இலக்கியத்தில் இரு புலவர்கள் உள்ளனர். ஒருவர் பேரி சாத்தனார். எனப்படுகிறார். மற்றவர் சீத்தலைச் சாத்தனார் எனப்படுகின்றார். இதுவே, சங்ககால மரபானால் தமிழகத்தவர் என்று கருதப்படும் புலவருக்கும் அடைமொழிப்பெயர் ஒன்று சூட்ட்டப்பட்டிருக்கும். என்பது உறுதி. மூவரும் பெயர்களும் வழக்கில் இருந்தன என்பதே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது இது மேலும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டும்.

ஈழத்துப் பூதன்வேனார் முதல் இன்றைய புதிய கவிஞர்கள்வரை, சங்ககாலம் முதல் இன்றுவரை இடையீடற்ற இலக்கிய வளர்ச்சி ஈழத்தில் தொடர்ந்தது என்பது மேலே கூறப்பட்ட கருத்துக்கள் மூலம் உறுதிபெறுகின்றன.

ஈழத்தில் நிலையாக வாழ்ந்த தமிழர் எவரும் இருக்கவில்லை என்றும் சிங்கள அரசுகள்மீது படையெடுக்க வந்த சோழ, பாண்டியர் படைகளுடனேயே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என்றும் பிற்காலத்தில் ஏற்பட்ட இத்தமிழர்களுடனான நெருங்கி வாழ்ந்த தொடர்பே சிங்களத்தில் தமிழ்ச் சொற்கள் சேரக்காரணமானது என்ற கருத்தும் முழு இலங்கையிலும் சிங்களவரே வாழ்ந்தனர் என்ற கருத்தும் சில (சிங்கள) அறிஞர்களிடம் உள்ளது. மேலே கூறப்பட்ட தொல்லியல் ஆய்வு அடிப்படையில் நோக்கும்போது இக்கருத்து தவறானது என்பது தெளிவாகும்.

எனவே உலகளாவிய தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் தனித்தும் இணைந்தும் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் ஈழம் தொன்மையான தமிழகம் என்பதையும் சிங்களம் ஒரு திராவிடமொழி என்பதையும் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்கின்றன. எனவே, ஈழத்தில் வாழும் தமிழர்கள் தொன்மையானவர்கள் என்பதில் ஐயமில்லை.

இவ்வாக்கம் ஈழத்தமிழர்களின் தொன்மைப் பற்றிய பல வலைப்பதிவர்களின் கேள்விக்கு பதிலாக மீள்பதிவிடப் பட்டுள்ளது.

நன்றி: எரிமலை: http://www.erimalai.info/2005/may/articles/eelathamilar_thonmai.htm
ஆக்கம்: மயிலங்கூடல் பி.நடராசன்