முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Saturday, February 20, 2010

பைபிள் தரும் தமிழ் கலைச்சொற்கள்

எபிரேயம், கிரேக்கம் போன்ற மூலமொழிகளில் இருந்து, தமிழாக்கம் செய்யப்பட்ட பைபிள் ஒன்றை நண்பர் ஒருவர் தந்தார். அந்த பைபிள் பதிப்பு பெங்களூரில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளது. மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள சொற்கள், தமிழ் மொழிக்கே உரிய நடையழகுடன், தமிழ் கலைச்சொற்களாக கையாண்டுள்ளனர். எமது பேச்சின் வினைச்சொற்களை மட்டுமன்றி, பைபிளின் அதிகாரங்கள், நாடுகளின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் என அனைத்தும் தமிழ் மொழியின் தனித்துவ மொழி நடையுடன் திறம்பட செய்துள்ளனர். கிரந்த எழுத்துக்களையும் முடிந்தவரை தவிர்த்தே மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. பாராட்டுக்குறியது.

இங்கே பைபிளின் (அங்கங்கள்) அதிகாரங்களை எவ்வாறு தமிழில் மொழிப் பெயர்ப்புத்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

Genesis – தொடக்க நூல்
Exodus – விடுதலைப் பயணம்
Leviticus - லேவியர்
Numbers - எண்ணிக்கை
Deuteronomy – இணைச் சட்டம்
Joshua - யோசுவா
Judges – நீதித் தலைவர்கள்
Ruth - ரூத்து
Samuel - சாமுவேல்
King - அரசர்கள்
Chronicles - குறிப்பேடு
Nehemiah - நெகேமியா
Job - யோபு
Psalms - திருப்பாடல்கள்
Proverbs - நீதிமொழிகள்
Ecclesiastes – சபை உரையாளர்
Song of Solomon – இனிமைமிகு பாடல்
Solomon - சாலமன்
Isaiah - எசாயா
Jeremiah - எரேமியா
Lamentations - புலம்பல்
Ezekiel - எசேக்கியல்
Daniel - தானியேல்
Hosea - ஒசேயா
Joel - யோவேல்
Obadiah - ஒபதியா
Jonah - யோனா
Micah - மீக்கா
Nahum - நாகூம்
Habakkuk - அபக்கூக்கு
Zephaniah - செப்பனியா
Haggai - ஆகாய்
Zechariah - செக்காரியா
Malachi - மலாக்கி
Matthew - மத்தேயு
Mark மாற்கு
Luke - லூக்கா
John – யோவான் (அருளப்பர்)
Romans - உரோமையர்
Corinthians - கொரிந்தியர்
Galatians - கலாத்தியர்
Ephesians - எபேசியர்
Philippians - பிலிப்பியர்
Colossians - கோலோசையர்
Thessalonians - தெசலோனிக்கர்
Timothy - திமொத்தேயூ
Titus - தீத்து
Philemon - பிலமோன்
Hebrews - எபிரேயர்
James - யாக்கோபு
Peter - பேதுரு
Jude – யூதா
Revelation – திருவெளிப்பாடு

மேலும் ஊர்களின் பெயர்கள், இயேசு தோன்றியதாகக் கூறப்படும், மரபுவழியினரின் பெயர்கள் கூட, கிரந்தத் திணிபு இல்லாமலே மிகவும் நேர்த்தியாக கலைச்சொற்களாக்கப் பட்டுள்ளன. அவற்றை எதிர்வரும் பதிவுகளில் பதிவிடுகின்றேன்.

நன்றி

Friday, February 19, 2010

ஹொங்கொங் த.ப.க காணொளிகள்

ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகின்றது. இக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின், காணொளி காட்சிகள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு இட்டுவைக்கின்றேன். எண்ணிக்கையில் மிகவும் குறைவான தமிழர்களே ஹொங்கொங்கில் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை ஒரு கடுகெதி ஓட்ட வாழ்க்கை என்றே கூறவேண்டும். இக்கடுகெதி ஓட்ட வாழ்க்கை புறச்சூழலிலும் தம் தாய் மொழி, பண்பாடு, கலை போன்றவற்றை மறவாது, அவற்றை பேணிப் பாதுகாக்கும் முகமாக நடாத்தப்பட்டு வரும், தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள் வரலாற்று தடங்கள் ஆகும்.

இனி காணொளிகளைப் பாருங்கள்.

ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு காணொளி விவரணம்.



ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் நிகழ்த்தப்பட்ட "நீயா நானா" நிகழ்வு.



ஹொங்கொங்கில் கணேஸ் குமரேஸ் அவர்களின் வயலின் வாசிப்பு நிகழ்வு.



ஹொங்கொங்கில் லேனா தமிழ்வாணன், "அனைவருடனும் நல்லுறவு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை.



ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடாத்திய "குழந்தைகள் தினம்" நிகழ்வு காணொளிக் காட்சிகள்.





இவை வெறும் பொழுதுப் போக்கு நிகழ்வுகளாக மட்டுமே அன்றி, எம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முன்னெடுப்புகளாகவே நான் பார்க்கின்றேன். உண்மையில் புலம் பெயர் தேசங்களில் எம்மொழி சிதைந்து வரும் இக்காலச்சூழமைவில் இவை மனதுக்கு மகிழ்வான நிகழ்வுகளாக உள்ளன.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Tuesday, February 16, 2010

"ஹொங்கொங்" பெயர் காரணம்

"ஹொங்கொங்" எனும் பெயர் கண்டோனீஸ் அல்லது ஹக்கா (Cantonese or Hakka) எனும் சீன மொழிகளில் ஒன்றில் இருந்தே தோன்றியதாக் கூறப்படுகின்றது. இருப்பினும் "ஹொங்கொங்" எனும் பெயருக்கான கண்டோனீஸ் மொழியின் பொருள் "நறுமணம் வீசும் துறைமுகம்" (Fragrant Harbour) என்பதாகும்.

1842 ஆம் ஆண்டு பிரித்தானியரின் வருகைக்கு முன்பு, தற்போது "எபர்டீன்" (Aberdeen) என்றழைக்கப்படும் இடத்திற்கும், "அப் லெய் ச்சாவ்: (Ap Lei Chau) எனும் குட்டித்தீவுக்கும் இடையிலான சிறிய குடா பகுதியை குறிக்கும் ஒரு பெயராகவே "ஹொங்கொங்" என அப்பகுதி வாழ் மீனவர்கள் தம் பேச்சு வழக்கில் அழைத்தனராம். இந்த சிறிய குடா பகுதியே பிரித்தானிய கப்பற் படையினருக்கும் இத்தீவின் பூர்வக் குடிகளான மீனவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது. சீனாவின் முத்து ஆற்றின் (Pearl River) முகத்துவாரமாகவும், நன்னீர் உற்புகும் கடல் பகுதியாகவும் அமைந்திருப்பதனால், இக்கடல் பரப்பின் நீர் சுவையானதாகவும் நறுமணமுடையதாகவும் இருக்கின்றது என்பது இங்கு வாழ் மீனவர்களின் கூற்றாகும். அதனாலேயே இவர்கள் இக்கடல் பகுதிக்கு "நறுமணம் வீசும் துறைமுகம்" எனும் பொருளில் "ஹொங்கொங்" என்று அழைத்தனராம். இன்றும் இக்கடல் பரப்பின் நீர் உப்பு சுவை அற்றதாகவே இருக்கின்றது. இந்த கடலில் பிடிக்கப்படும் மீன்களும் நன்னீர் மீன்கள் (குளத்து மீன்கள்) போன்று உப்பற்றதாகவே இருக்கின்றது.

அதன்பின் இத்தீவு பிரித்தானியரின் ஆட்சிக்கு உற்பட்டப் பொழுது, முழு ஹொங்கொங் தீவுப் பகுதியையும் அதனை அண்டிய கடல் பகுதியையும் "ஹொங்கொங்" என்று பிரித்தானியர்களால் அழைக்கப்பட்டதாம். (Ref) (மேலுள்ள படத்தில் செவ்வட்டம் இட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)

இருப்பினும் "முதலாம் அபின் போர்" (First Opium War) முடிவடைந்து, 1842 இல் நான்கிங் உடன்படிக்கை (Treaty of Nanking) கைச்சாத்திடப்பட்ட பொழுதே "ஹொங்கொங்" எனும் பெயர் உலக வரலாற்றில் முதன்முதல் இத் தீவுக்கான பெயராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 1860 ஆம் ஆண்டு "இரண்டாம் அபின் போர்" (Second Opium War) இன் பிறகு மேற்கொண்ட பெக்கிங் மாநாடு (Convention of Peking) உடன்படிக்கைப் படி ஹொங்கொங் தீவுடன், கவ்லூண் தீபகற்பப் பகுதியும் (Kowloon peninsula) "கல்லுடைப்பான் தீவு" (Stonecutter Island) உம் பிரித்தானியாவிற்கு கையளிக்கப்பட்டது. அப்பொழுது அவ்விரண்டு பகுதிகளையும் இணைத்து, பிரித்தானியரின் ஆட்சிக்குற்பட்ட முழு நிலப்பரப்புக்குமான பெயராக "ஹொங்கொங்" மாற்றம் பெற்றது.

1898 யூன் 9 ஆம் நாள் பிரித்தானியா, சீனப் பேரரசு இரண்டும் செய்துக்கொண்ட இன்னுமொரு உடன்படிக்கையின் படி "இரண்டாம் பெக்கிங் மாநாடு" (Second Convention of Peking) சீனாவின் "ஷம் சுன்" ஆற்றின் (Sham Chun River) தெற்காக உள்ள அகன்ற நிலப்பரப்பும், அதனைச் சுற்றியுள்ள 262 தீவுத் தொகுதிகளும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் புதிய அரசக்கட்டுப்பாட்டு பகுதியாக (New Territories) மாறியது.

அதனைத் தொடர்ந்து இன்று ஹொங்கொங் தீவுப்பகுதியும், கவ்லூண் தீபகற்பப் பகுதியும், ஷம் சுன் ஆற்றின் தெற்காக உள்ள அகன்ற தீபகற்பப் பகுதியுடன் 262 குட்டித் தீவுகளையும் உள்ளடக்கிய "புதியக் அரசக்கட்டுப்பாட்டுப் பகுதி" (New Territories) உம் சேர்த்து பிரித்தானிய ஆட்சிக்கு உற்பட்ட முழு நிலப்பரப்பையும் குறிக்கும் பெயராகவே "ஹொங்கொங்" என்று அழைக்கப்படுகின்றது.

1997 ஆம் ஆண்டு ஹொங்கொங் ஆட்சியை சீனாவிடம் பிரித்தானியா கையளித்ததன் பின், சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக அழைக்கப்பட்டாலும், அதே நில எல்லைகளையும் கடல் எல்லைகளையும் கொண்டு "ஹொங்கொங்" தனித்துவமான ஆட்சி அதிகாரங்களுடன் தொடர்ந்தும் இருக்கின்றது.

தொடர்புடைய இடுகை: ஹொங்கொங் வரலாறு

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Wednesday, February 10, 2010

கற்போம் கண்டோனீஸ் இலக்கங்கள்

ஹொங்கொங் நாட்டில் 95% வீதமான மக்களால் பேசப்படும் மொழி "கண்டோனீஸ்" எனும் மொழியாகும். இது சீன மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிளை மொழியாகும். இம்மொழியும் ஆங்கிலமும் இந்நாட்டின் அரசகரும மொழிகளாக இருக்கின்றன.

இருப்பினும் ஹொங்கொங் தீவுப்பகுதியையும், கவ்லூண் சிம் ஷா சுயி பகுதிகளுக்கு அப்பால் சென்றால், கண்டோனீஸ் மொழி பேசுவோரே 98% வீதம் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசுத் தெரிந்தோரைக் காண்பது அரிது. பழகுவதற்கு இனிமையான இம்மக்களிடம் நாம் கொஞ்சம் இவர்களது மொழியையும் கற்றுக் கொண்டோமானால், இவர்களுடனான நெருக்கமான உரையாடலுக்கு உதவியாக இருக்கும்.

சரி! கண்டோனீஸ் மொழியின் இலக்கங்களை எப்படி உச்சரிப்பது? இதில் ஒரு சுவையான விசயமும் உண்டு. தொடர்ந்து பாருங்கள் புரியும்.

1 - yāt - யத் - ஒன்று

2 - yih - யீஹ் - இரண்டு

3 - sāam - ஸாம் - மூன்று

4 - sei - ஸேய் - நான்கு

5 - ńgh - ன்ங் - ஐந்து

6 - luhk - லொக் - ஆறு

7 - chāt - ச்சத் - ஏழு

8 - baat - Bபாத் - எட்டு

9 - gáu - Gகவ் - ஒன்பது

0 - Lihng - லிங் - பூச்சியம்

10 - sahp - ஸப் - பத்து

--------------------------------------------------------------------------
தமிழில் பத்துக்குப் பிறகு நாம் பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று என இலக்கத்தின் சொற்களை இணைத்து கூறும் வழக்கே எம்முடையது. ஆனால் கண்டோனீஸ் மொழியில் அப்படியில்லை. பத்து ஒன்று, பத்து இரண்டு, பத்து மூன்று என ஒவ்வொரு இலக்கங்களின் சொல்லையும் தனித்தனியே பிரித்து பிரித்து கூறும் வழக்கு அவர்களுடையது. கீழே பாருங்கள்.

11 - sahp + yāt - ஸப் யத் - பதினொன்று (பத்து ஒன்று)

12 - sahp + yih - ஸப் யீ - பன்னிரண்டு (பத்து இரண்டு)

13 - sahp + sāam - ஸப் ஸாம் - பதின்மூன்று (பத்து மூன்று)

14 - sahp + sei - ஸப் ஸேய் - பதினான்கு (பத்து நான்கு)

15 - sahp + ńgh - ஸப் ன்ங் - பதினைந்து (பத்து ஐந்து)

16 - sahp + luhk - ஸப் லொக் - பதினாறு (பத்து ஆறு)

17 - sahp + chāt - ஸப் ச்சாத் - பதினேழு (பத்து ஏழு)

18 - sahp + baat - ஸப் Bபாத் - பதினெட்டு (பத்து எட்டு)

19 - sahp + gáu - ஸப் Cகவ் - பத்தொன்பது (பத்து ஒன்பது)

20 - yih + sahp யீ ஸப் - இருபது (இரண்டு பத்து)

--------------------------------------------------------------------------
"இருபது" என்பதை கண்டோனீஸ் மொழியில் "இரண்டு பத்து" என்பார்கள். இனி அவ்வழக்கின் படியே "இரண்டு பத்து ஒன்று, இரண்டு பத்து இரண்டு, இரண்டு பத்து மூன்று" என கூறிக்கொண்டு வாருங்கள்.

21 - yih + sahp + yāt - யீ ஸப் யத் - இருபத்தியொன்று

22 - yih + sahp + yih - யீ ஸப் யீ - இருபத்திரண்டு

23 - yih + sahp + sāam - யீ ஸப் ஸாம் - இருபத்திமூன்று

24 - yih + sahp + sei - யீ ஸப் ஸேய் - இருபத்திநான்கு

25 - yih + sahp + ńgh - யீ ஸப் ன்ங் - இருபத்தைந்து

26 - yih + sahp + luhk - யீ ஸப் லொக் - இருபத்தாறு

27 - yih + sahp + chāt - யீ ஸப் ச்சாத் - இருபத்தேழு

28 - yih + sahp + baat - யீ ஸப் Bபாத் - இருபத்தெட்டு

29 - yih + sahp + gáu - யீ ஸப் Cகவ் - இருபத்தொன்பது

30 - sāam + sahp - ஸாம் ஸப் - முப்பது (மூன்று பத்து)

என்ன விளங்கிவிட்டதா? இனி அப்படியே "மூன்று பத்து ஒன்று, மூன்று பத்து இரண்டு, மூன்று பத்து மூன்று, மூன்று பத்து நான்கு" என தொடரவேண்டியது தான். 99 வரை அப்படியே தான்.

30 - sāam + sahp - ஸாம் ஸப் - முப்பது

40 - sei + sahp - ஸேய் ஸப் - நாற்பது

50 - ńgh + sahp - ன்ங் ஸப் - ஐம்பது

60 - luhk + sahp - லொக் ஸப் - அறுபது

70 - chāt + sahp - ச்சத் ஸப் - எழுபது

80 - baat + sahp - Bபாத் ஸப் - என்பது

90 - gáu + sahp - Gகவ் ஸப் - தொன்னூறு

100 - yāt + baak - யத் Bபாக் - நூறு

--------------------------------------------------------------------------
நாம் ஒன்றுடன் இரண்டு பூச்சியங்களை கொண்ட இலக்கத்தை "நூறு" (100)என்று குறிப்பிடுவோம். ஆனால் கண்டோனீஸ் மொழியில் "நூறு" என்பதை "ஒன்று நூறு" என்றே அழைப்பர். அப்படியே "இரண்டு நூறு, மூன்று நூறு, நான்கு நூறு" என தொடரும்.

200 - yih + baak - யீ Bபாக் - இருநூறு (இரண்டு நூறு)

300 - sāam + baak - ஸாம் Bபாக் - முன்னூறு (மூன்று நூறு)

"ஆயிரம்" என்பதையும் அப்படியேதான்; "ஒன்று ஆயிரம், இரண்டு ஆயிரம், மூன்று ஆயிரம், நான்கு ஆயிரம்" என அழைக்கவேண்டும்.

1000 - yāt + chīn - யத் ச்சின் - ஒராயிரம் (ஒன்று ஆயிரம்)

2000 - yih + chīn - யீ ச்சின் - இரண்டாயிரம் (இரண்டு ஆயிரம்)

3000 - sāam + chīn - ஸாம் ச்சின் - மூவாயிரம் (மூன்று ஆயிரம்)

--------------------------------------------------------------------------
நாம் இரண்டாயிரம், மூவாயிரம் எனத் தொடர்ந்து, ஒன்றுடன் நான்கு பூச்சியங்களை இணைந்து பயன்படும் பொழுது அதனை "பத்தாயிரம்" என்று தான் அழைப்போம். ஆனால் கண்டோனீஸ் மொழியில் பத்தாயிரம் என்பதை "ஒன்று பத்தாயிரம், இரண்டு பத்தாயிரம், மூன்று பத்தாயிரம்" என்றே அழைக்க வேண்டும்.

10,000 - yāt + maahn - யத் மாஹ்ன் - பத்தாயிரம்

20,000 - yih + maahn - யீ மாஹ்ன் - இருபதாயிரம்

30,000 - sāam + maahn - ஸாம் மாஹ்ன் - முப்பதாயிரம்

100,000 - sahp + maahn - ஸப் மாஹ்ன் - ஒரு இலட்சம்
(பத்து பத்தாயிரம் என்றே அழைப்பர்.)

1,000,000 - yāt + baak + maahn - யத் Bபாக் மாஹ்ன் - பத்துலட்சம்
(ஒன்று நூறு பத்தாயிரம் என்றே அழைப்பர். அதாவது பத்தாயிரங்கள் நூறு)

10,000,000 - yāt + chīn + maahn - யத் ச்சின் மாஹ்ன் - ஒருக்கோடி
(ஒன்று ஆயிரம் பத்தாயிரம் என்றே அழைப்பர். அதாவது பத்தாயிரங்கள் ஆயிரம்)

இதுதான் கண்டோனீஸ் மொழியின் இலக்கங்கள் உச்சரிக்கும் வழக்கு. இவ்வேறுப்பாட்டை சரியாக விளங்கிக்கொண்டோமானால் நாமும் ஒருவாறு கண்டோனீஸ் பேசிப் பழகலாம். குறைந்தப் பட்சம் வணிக மையங்களில் விலை விபரங்களை கேட்டு அறிந்துக்கொள்வதற்காவது உதவும் அல்லவா! யாருக்கு தெரியும்? சிலவேளை உங்களில் யாராவது ஹொங்கொங் வந்து தமது எதிர்க்காலத்தை ஓட்ட வேண்டிய தேவையேற்பட்டால், இந்த இடுகை அப்போது உங்களுக்கு பயனாக அமையலாம்.

இருப்பினும் ஹொங்கொங்கரின் இந்த இலக்க உச்சரிப்பு முறைமை நமக்கு உதவுகிறதோ இல்லையோ; ஆனால் நாம் இலக்கங்களை உச்சரிக்கும் முறைமைக்கும், சீனர்கள் உச்சரிக்கும் முறைமைக்குமான வேறுப்பாட்டை அறிந்துக்கொள்ள உதவும்.

நன்றி

அன்புடன் அருண்
HK Arun

தன்னம்பிக்கை - அற்புத நடனம்

"நடனம் ஆடுதல்" எனும் சொற்றொடரில், "ஆடுதல்" எனும் சொல்லே கால்களில் ஆடுவதையே குறிக்கின்றது. ஆனால் காலை இழந்த ஒரு நபரும் கையை இழந்த ஒரு பெண்மணியும் இணைந்து ஆடும் இந்த நடனம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றது. கண்களில் கண்ணீரை வரவைக்கின்றது.

இந்த ஜோடிகளின் நடனத்தின் முன்னே; மைக்கேல் ஜேக்சன், பிரபுதேவா நடனம் எல்லாம் என்னவென்று தோன்றுகிறது. தன்னம்பிக்கை எனும் சொல்லுக்கு அர்த்தம் புகட்டுகின்றனர் இவ்விருவரும்.



http://www.youtube.com/watch?v=LnLVRQCjh8c&feature=player_embedded

Tuesday, February 9, 2010

நோவாவின் பேழை (கப்பல்)

கிருஸ்தவர்களின் புனித நூலாகிய பைபளில் "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை" குறித்த குறிப்புகள் உள்ளன. அக்குறிப்புகள் கற்பனை என்போரும், உண்மை வரலாறு என்று நம்புவோரும் உள்ளனர். பைபிளில் கூறப்படும் இக்குறிப்புகள் கற்பனையானதா, வரலாற்று நிகழ்வா என்பதை விடுத்து; அக்குறிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுத்து நோவாவின் பேழையை நிர்மானித்து, உல்லாசப் பயணிகளை ஈர்த்து, வருவாயை எவ்வாறு பெருக்கிக்கொள்ளலாம் எனும் திட்டத்தை ஹொங்கொங் கையில் எடுத்தது. விளைவு, நோவாவின் கப்பலை "மா வான்" எனும் குட்டித் தீவில் வெற்றிகரமாக கட்டிமுடிக்கப்பட்டது. அதன் திறந்து வைப்பு நிகழ்வு கடந்த 2009 பெப்ரவரி 15 ஆம் நாள் நடைப்பெற்றது.

பைபிள் கூறும் நோவாவின் கதை
--------------------------------------------------------------------------
பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை" என்றழைக்கப்படுகின்றது. இந்த கப்பலை உருவாக்கிய நோவாவிடம்; நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் நிலைக்க ஒவ்வொரு விலங்கினத்தினத்தினதும், பறவையினத்தினதும், ஊர்வனவற்றினதும் ஒவ்வொரு சோடிகளை நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொள்ளும் படியும் கடவுள் கட்டளை இடுகிறார். அவ்வாறே நோவாவும் தானும் தனது குடும்பத்தாருடன், விலங்குகளுடனும் கப்பலுனுள் சென்று மூடிக்கொள்கின்றனர். மக்கள் நோவாவின் செயலை நகைக்கின்றனர். ஆனால் கடவுளின் கட்டளைப்படி நோவா கப்பலினுள் சென்றவுடன் பிரளயம் ஏற்படுகின்றது. 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, வெள்ளப்பெருக்கு, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அப்பிரளயத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் உயிரிணங்களும் அழிந்துப் போகின்றன. நோவாவின் கப்பல் மட்டும் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு சோடி சோடிகளாக வெளியேறுகின்றன.

அப்பேரழிவின் பின் கடவுள் நோவாவிடம் ஒரு உறுதிமொழி அளிக்கின்றார். அதாவது "இதன் பிறகு இதுப்போன்றதோர் பேரழிவை மீண்டும் ஏற்படுத்தமாட்டேன்" என கடவுள் நோவாவிடம் அளிக்கும் உறுதிமொழியே அது. அவ்வுறுதி மொழியினை நினைவு கூறும் விதமாக கடவுள் வானில் வானவில்லை தோன்றச் செய்கிறார். அதுவே முதன் முதலில் வானில் தோன்றிய வானவில். இன்றும் வானில் தோன்றும் வானவில் அவ்வுறுதி மொழியையே நினைவு கூறுகின்றது எனவும் பைபிள் கூறுகிறது.

பைபிளில் கூறப்படும் இக்கதையின் படி நோவாவின் கப்பல் அரராத் எனும் மலையில் தரைத்தட்டியதாக நம்பப்படுகின்றது. அரராத் மலை தற்போதைய துருக்கியில் இருப்பதாகவும், அங்கே நோவாவின் கப்பல் தரைத் தட்டியதாகக் பைபிள் கூறப்படும் இடங்களில் தேடுதல் நடைப்பெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன.

எப்படியோ பைபிள் கூறும்; நோவாவின் கப்பலை அரராத் மலையில் கண்டுப்பிடிக்கின்றனரோ இல்லையோ, ஹொங்கொங் வந்தால் நீங்களும் பார்க்கலாம்.

நோவாவின் பேழை (Noah's Ark)
--------------------------------------------------------------------------
பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போன்று நோவாவின் பேழையை வடிவமைத்து, அதில் கூறப்பட்டதுப் போன்று மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் தத்ரூபமாக கண்முன்னே இருத்தி இருக்கின்றனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உண்மையில் உயிருள்ளவைகள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பாகும். 67 சோடி விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய தோற்ற அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவை கண்களுக்கு பசுமையாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.

வடிவமைக்கப்பட்டுருக்கும் நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் பிரளயத்தில் சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம் 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதாரக் கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. மேலும் பல்வேறு காட்சிகள் உள்ளன.
உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

அதிலும் ஒரு சிறப்பான அனுகுமுறையை நோவாவின் பேழை பணியாளர்கள் கையாள்வதை காணக்கூடியதாக இருந்தது. உள்ளே வரும் பார்வையாளர்களை "நோவாவின் கப்பலுக்கு நல்வரவு, தயவுசெய்து உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுக்காதீர்கள்" என அறிவுறுத்தலையும் வரவேற்புரையுடன் வழங்குகின்றனர். உள்ளே எல்லா இடங்களிலும் கண்காணிப்பாளர்கள் கவனித்த வண்ணமே உள்ளனர். ஒவ்வொரு காட்சிகளையும் விவரித்து கூற ஆங்கிலம், கண்டோனீஸ் மொழி விவரிப்பாளர்கள் உள்ளனர்.

பண்டையச் சீனாவின் பழங்காலச் சின்னங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 10 இடங்களில், இந்த மா வான் தீவும் ஒன்று என்பதால், பல பண்டைய சீனச் சின்னங்களையும் உள்ளே பார்வையிடலாம். சந்திரனின் இறங்கிய எட்டாவது வின்வெளி வீரர், சந்திரனின் இறங்கும் போது உடுத்தியிருந்த உடை மற்றும் உபகரணங்கள் இங்கே காட்சிப்படுத்தியுள்ளன. இதைத் தவிர சிறுவர்களுக்கானப் பகுதி, உணவகப் பகுதி என்பனவும் உள்ளேயே உள்ளன. மூன்றாம் தளம் உல்லாசப் பயணிகளுக்கான தங்குமிடமாகும்.

குறிப்பாக கடல் மேல் கட்டப்பட்டிருக்கும் (Tsing Ma Bridge) சிங் மா பாலத்தின் அற்புதக்காட்சி, சுற்றியிருக்கும் தீவுகளின் காட்சி, இயற்கை சூழ்ந்த அமைவிடம், கடற்கரைக் காட்சி, பூங்கா உற்பட இத்தீவின் மாடிமனை குடியிருப்புத் தொகுதிகள் எல்லாம் கண்களைக் கொள்ளைக்கொள்கின்றன.

இந்த நோவாவின் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ள இடம் "மா வான்" Ma Wan Island" எனும் தீவிலாகும். இத்தீவு 0.96 கிலோ மீட்டர்கள் மட்டுமே உள்ள ஒரு குட்டித் தீவாகும். இத்தீவில் ஒருப்பக்கம் மாடிமனை குடியிருப்புகளும், மறுபக்கம் ஹொங்கொங் தேசிய வனவியல் பகுதிக்குச் சொந்தமான மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியும் உள்ளன. இத்தீவின் மலைமுகடுகளுக்கு மேலாக ஊடறுத்தே ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் ஷிங் மா பாலம் (Tsing Ma Bridge) அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தீவு ஹொங்கொங் பூர்வீகக் குடிகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை பாதுக்காக்கும் இடமாகவும் உள்ளது. இதனால் இத்தீவில் வசிக்கும் குடியிருப்பாளர்களைத் தவிர மற்றோர் வாகனங்களில் செல்வது தடைச்செய்யப்பட்டுள்ளது. ஷிங் மா பாலம் ஊடாக இத்தீவுக்குச் செல்லுவதற்கான கிளைப் பாலம் ஒன்று இருந்தாலும், அதனூடாக சிறப்பு பயண அனுமதிப் பெற்றோரைத் தவிர வேறு யாரும் பயணிக்க முடியாது. தனியார் வாகனங்களிற்கு அனுமதி இல்லை.

எனவே இத்தீவுக்கு பயணிப்பதானால் இரண்டு கடல் வழியில் பயணிக்கலாம். ஒன்று ஹொங்கொங் தீவில் சென்றலில் (Central) இருந்து கடல் வழியாகவும், மற்றது "ச்சுன் வான்" (Tseun Wan) எனும் பகுதியிலிருந்து கடல்வழியாகவும் பயணிக்கலாம். விமானத்தின் வசதிகளுக்கு இணையான சொகுசு, அதிவேக படகு சேவை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் வழி பயணத்தின் போது இருபுறமும் காணப்படும் தீவுகளும், கடல் மேல் கட்டப்படிருக்கும் மேம்பாலங்களும் பார்வைக்கு புத்தூக்கம் தருகின்றது.

நோவாவின் கப்பலின் உள்ளே நிழல்படங்கள் எடுக்க தடைச் செய்யப்பட்டுள்ளதால், வெளிப்புறக் காட்சிகளை எடுத்து பதிவேற்றியுள்ளேன். எனது நிழல் படக்கருவி தரமானதாக இல்லை என்பதால் படங்கள் சுமராகவே உள்ளன. நிழப் படங்களை சொடுக்கி பெரிதாகப் பார்க்கலாம்.

நிழல் படங்கள்
--------------------------------------------------------------------------














































குறிப்பாக கடல் மேல் கட்டப்பட்டிருக்கும் (Tsing Ma Bridge) சிங் மா பாலத்தின் அற்புதக்காட்சி, சுற்றியிருக்கும் தீவுகளின் காட்சி, இயற்கை சூழ்ந்த அமைவிடம், கடற்கரைக் காட்சி, பூங்கா உற்பட இத்தீவின் மாடிமனை குடியிருப்புத் தொகுதிகள் என எல்லாம் கண்களைக் கொள்ளைக்கொள்கின்றன.

மேலும் விபரங்களை நோவாவின் பேழை அதிகாரப்பூர்வத் தளத்தில் பாருங்கள்

நன்றி

அன்புடன்
அருண் HK Arun