முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Friday, March 12, 2010

சிங் யீ தீவு (Tsing Yi Island) விவரணம்

(Tsing Yi) ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்குள் உள்ள ஒரு தீவாகும். இது புதிய கட்டுப்பாட்டகம் (New Territories) பகுதியில் குவாய் சிங் மாவட்டத்தில் (Kwai Tsing District) ஹொங்கொங் தீவின் (Hong Kong Island) வடமேற்காகவும், சுன் வான் (Tsuen Wan) பகுதியின் கிழக்காகவும் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 10. 69 கிலோ மீட்டர்களாகும். இத்தீவு (Tsing Yi Tong, Mun Tsai Tong and Tsing Yi Bay) எனும் மூன்று குடாக்கள் சூழ நடுவே அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாகும்.

இந்தத் தீவை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கூறமுடியும். இந்த நான்கில் ஒரு பகுதியான வடகிழக்கு நிலப் பகுதி மட்டுமே மக்கள் வசிப்பிடமாக உள்ளது. வசிப்பிடங்கள் எனும் போது அவை மாடிமனை குடியிருப்பு தொகுதிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. எல்லாம் 30 மாடிகளுக்கும் மேலான மாடிமனை கட்டிடங்களாகும். குறிப்பாக இம்மாடிமனை குடியிருப்புத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ள கடல் கரையோரப் பகுதிகள் நிரப்பப்பட்டு, சுற்றிலும் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இம்மதில் சுவருக்களுக்கு உற்புறமாக அழகிய பூங்காக்களும், முசுபாறும் இருக்கைகளும், கடலோர உலாச்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை காண்போர் கண்களுக்கு இதமான காட்சியையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.

இத் தீவின் தென்கிழக்கு பகுதி அதிபார ஊர்தி துறையாகவும், பாரிய இயந்திர உற்பத்திச்சாலைகளாகவும் உள்ளன. வடமேற்கு பகுதியும் அதேப்போன்றே புதிய இயந்திய உற்பத்திச்சாலைகளாக உருவாக்கம் பெற்றுவருகின்றது. போக்குவரத்து இடைமாற்றகங்களும் சில கப்பல் கட்டும் நிறுவனங்களும் உள்ளன.

இத்தீவின் பெரும் பகுதி மக்கள் வாழா காடாகவே இருக்கின்றது. இவை ஹொங்கொங் தேசிய வனத்துறையினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இப்பகுதிகளில் ஹொங்கொங் அரசின் வெவ்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கவ்லூன், புதிய கட்டுப்பாட்டகம் பகுதிகளுக்கான போக்குவரத்து மேம்பாலங்கள் இத்தீவின் மலைக்குன்றுகள் ஊடாகவே அமைக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மேம்பாலங்கள் இத்தீவை ஊடறுத்தே செல்கின்றன. சில பாதைகள் மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகளாகவும், சில மலைக்குன்றின் மேல் தொட்டு செல்லும் மேம்பாலங்களாகவும் உள்ளன.

மக்கள் தொகை

பிரித்தானியர் ஆட்சி காலத்தில், பிரித்தானிய அரசு இத்தீவை தமது புதியக் கட்டுப்பாட்டகப் பகுதியாக (New Territories) 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட காலப்பகுதியில், அதாவது 1898 ஆம் ஆண்டளவில் இத்தீவில் 4000 வரையிலான மீனவ மக்கள் மட்டுமே வசித்து வந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

அதன்பின்னர் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிரித்தித் திட்டங்களை தொடர்ந்து வசிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளில் வசிப்போர் எண்ணிக்கை ஐம்பது மடங்கு உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 200,400 பேர் இத்தீவில் வசிப்பதாக புள்ளிவிபர அறிக்கைகள் கூறுகின்றன. அதில் கணிசமானோர் ஐரோப்பியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நகர்வலப் பார்வை


நான் இத்தீவிற்கு டை கொக் சுயி எனும் இடத்தில் இருந்து MTR தொடருந்தில் பயணித்தேன். சாதாரணமாக நிழத்தடி சுரங்கப் பாதையில் ஓடும் மின்சார துரிதகதி தொடருந்து நம் சொங் (Nam Cheong) தொடருந்தகத்தில் இருந்து நிலமட்டத்திற்கு மேலே உயர்ந்து மேம்பாலத்தின் ஊடாக பயணிக்கும். அதனால் வெளிப்புறக் காட்சிகளையும் பார்த்த வண்ணமே பயணிக்கக் கூடியதாய் இருந்தது. நில மட்டத்திலிருந்து உயரத்தில் மேம்பாலம் ஊடாக பயணிக்கும் தொடருந்து, கவ்லூன் நிலப்பரப்பில் இருந்து கடல் மேல் பலநூறு அடிகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தின் ஊடாக சிங் யீ தீவை நோக்கி விரைகின்றது.

இடையே மா வான் (Ma Wan Island) எனும் குட்டித் தீவின் மலை முகட்டை தடவிய வண்ணம் கடலின் மேலே உயரத்தில் மேம்பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் தொடருந்து, சிங் யீ தீவின் Martime Square வணிகக் கட்டிடத்தின் நான்காவது நின்றது. ஆம்! தொடருந்தகம் வணிகக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. சிங் யீ MTR தொடருந்து நிறுத்தகத்தின் வரைப்படம் கீழே உள்ளது; பார்க்கவும்.

நான்காவது மாடியில் இருந்து முதலாம் மாடிக்கு கீழிறங்கி, இடைகுறுக்கு நடைப்பாலம் ஊடாக பேருந்து நிறுத்தகத்திற்குச் செல்லலாம். பேருந்து நிறுத்தகமும் நிலமட்டத்தில் இருந்து பல அடி உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது பேருந்து நிறுத்தகமும் ஒரு வணிகக் கட்டிடத்தின் மேல் தட்டிலேயே உள்ளது. (கீழே நிழல் படத்தைப் பார்க்கவும்.)

பேருந்து நிறுத்தகத்தில் இருந்து படிகள் ஊடாக அப்படியே நிலமட்டத்திற்கு இறங்கி, கடற்கரை உலாச்சாலையூடாக நடந்தேன். எதிரே மாடி மனைகளும், மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அழகாக காட்சியளித்தன. ஒவ்வொரு கட்டிடமும் ஹொங்கொங்கின் பொருளாதார வளர்ச்சியை சொல்லிக்காட்டின.

குறிப்பாக உலாச் சாலையும், உலாவுவோருக்கான இடையிடையே அமைக்கப்பட்டிருக்கும் முசுபாறும் இருக்கைகளும், கண்களுக்கு இதமான பசுமையான மரங்களும், அதிப்பார ஊர்தி ஏற்றிறக்கும் துறையும் இத்தீவின் சிறப்பாகும்.

நிழற்படத்தில் காணப்படும் தொடருந்து மேம்பாலம் இரட்டை மேம்பாலமாகும். அதிலும் இரண்டிரண்டு பாதைக் கோடுகளாக மொத்தம் நான்கு பாதைக் கோடுகள் உள்ளன. (நிழல்படத்தில் காண்க)

அநேகமாக எந்த ஒரு நாட்டினதும் தலைநகர் வளர்ச்சியுடனும், உள்ளூர் பிரதேசங்கள் பின் தங்கிய நிலையிலும் காணப்படும். ஆனால் இங்கு அவ்வாறு அல்லாமல் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் எங்கு சென்றாலும் இந்நாட்டின் வளர்ச்சியை அளவிட முடியும். வளர்ச்சி ஒரு புறம் இருக்க, யாரும் எதற்கும் எவ்வித அச்சமும் இன்றி வாழக்கூடிய சுதந்திரமான தேசம். சுதந்திர வாழ்க்கை என்றால் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையை பார்த்துத்தான் புரிந்துக்கொள்ள வேண்டும். களவு பயம் இல்லை. போகும் வரும் இடங்களில் கொசப்புகளின் தொல்லை இல்லை. பெண்கள் உள்ளாடையுடன் இரவு பன்னிரண்டு மணிக்கும் தன்னந்தனியே எங்கு போய் வந்தாலும் யாரும் எவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள். இந்தியத் திரைப்படங்களில் காட்டுவதைப் போன்று எவரும் ஜொல்லு விட்டுக்கொண்டு பின் செல்வதும் இல்லை. இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்தது என்ன தெரியுமா? பார்க்கும் எந்த இடத்திலும் குப்பை கூளங்களைக் காணமுடியாது. புகைப்பிடிப்போர் கூட சிகரட் அடித்துண்டுகளை கண்டக்கண்ட இடங்களில் வீசிச் செல்லாமல், அவற்றைப் போடுவதற்கான கூடைகளிலேயே போட்டுசெல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சிங் யீ எம்ரிஆர் தொடருந்து நிறுத்தகத்தில் ஏதேனும் தூசி தும்புகள் இருக்கின்றதா என நுன்நோக்கி கருவிக்கொண்டு தான் பார்க்கவேண்டும். (எம்ரிஆர் தொடருந்தகப் படத்தைப் பார்க்கவும்.) அந்தளவிற்கு ஒவ்வொரு இடங்களையும் இந்த நாட்டு அரசாங்கம் நன்கு திட்டமிட்டு பராமரித்து வருகிறது. (அட நம் நாட்டில்!!!!)

எந்த ஒரு பொது இடத்திலும் குப்பைகள் இல்லை. ஏன் ஹொங்கொங்கில் குப்பைத் தொட்டிகள் கூட அழகாகத் தான் இருக்கிறது; இதோ கூகிளில் பாருங்கள். எந்த ஒரு பொது இடங்களிலும் யாரும் எச்சில் துப்புவதில்லை. பிரித்தானியர் தமது ஆட்சிக் காலம் தொட்டே இவ்வாறான சுத்தம் பேணல்களை முறையாக நெறிப்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. மக்கள் பல தலமுறைகளாக இந்த ஒழுங்கு முறைமைகளைப் பின்பற்றி வந்ததன் வெளிப்பாடாக, இன்றைய சிறுவர் வரை இச்சுத்தம் பேணலைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இத்தீவில் மட்டுமல்ல ஹொங்கொங் நாட்டின் எல்லா இடங்களிலும் இதே சுத்தத்தைக் காணலாம். இந்த சிங் யீ (Tsing Yi) தீவிலும் அதுவே எனக்கு அழகாகப் பட்டது.

குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகள் சுத்தம் பேணல் என்றால் என்ன, சுகாதார நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பவற்றை இதுப்போன்ற நாடுகளுக்கு பயணித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆவல். கால் இல்லாதவனை செருப்பு இல்லாதவன் பார்த்து ஆறுதல் அடைவது அல்ல உயர்வு. மாறிவரும் உலக ஒழுங்குகளைப் பார்த்தேனும் திருந்திக்கொள்ள முனைவதுதான் உயர்வு!

மேலும் இத்தீவின் நிழற்படத் தொகுப்பில் 50 படங்கள் பதிவேற்றியுள்ளேன். அப்படங்களைப் பாருங்கள். நான் சொல்வது உண்மையா என்பதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Wednesday, March 10, 2010

சிங் யீ நிழற்படத் தொகுப்பு (Tsing Yi Images)

சிங் யீ தீவு ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவாகும். இத்தீவு குறித்த விவரணப் பதிவை இங்கே பார்க்கலாம். இத்தீவிற்கு 2009 ஜூன் 28 ஆம் திகதி பயணித்தப் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இங்கே உங்கள் பார்வைக்காக.

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.


"Maritime Square" வணிக மையத்தின் நான்காவது மாடியில் சிங் யீ MTR தொடருந்து நிறுத்தகம்


வணிக மையத்தின் ஊடாக இறங்கும் வழியில் ஒரு அழகு உணவகம்.


முதலாம் மாடி ஊடாக வெளியேற்றப் பாதை நோக்கி...


வணிகக் கட்டிடத்தில் இருந்து பேருந்து நிறுத்தகத்திற்கான குறுக்கு நடைப்பாலத்தில்.


எதிரே தெரிவது பேருந்து நிறுத்தகம். நிலமட்டத்தில் இருந்து பல அடிகள் உயரத்தில் பேருந்து நிறுத்தகம்.


பேருந்து நிறுத்தகமும் மாடிமனைகளும்


வானுயர் மாடி மனைகள்


சிங் யீ (Tsing Yi) பேருந்து நிறுத்தகம்


நில மட்டத்தில் பயணிக்கும் பேருந்துகள், பேருந்து நிறுத்தகத்திற்கு வந்தடைவதற்கான பாதை.


பேருந்து நிறுத்தகத்தில் இருந்து கீழ் இறங்கி ஒரு பார்வை. வந்த வழி!


வணிகக் கட்டிடத்தில் இருந்து பேருந்து நிறுத்தகத்திற்கு செல்லும் குறுக்கு நடைப்பாலம்.


எதிரே தெரிவது "சுன் வான்" நகரக் காட்சி.


கவ்லூண் பகுதியில் இருந்து "சிங் யீ" ஊடாகச் செல்லும் தொடருந்து மேம்பாலம்.


உலாச் சாலையும் கடலும்


கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மேம்பாலமும் ச்சுன் வான் பகுதிக் காட்சியும்


விளையாட்டு மைதானமும், வீதியும், ஒரு மாடிமனை கட்டிடத் தொகுதியும்.


மாடிமனைக் கட்டிடம்


உலாச் சாலையும் மேம் பாலங்களும்


அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வீதி


மேம் பாலமும் கீழ் பாதையும்


முசுப்பாற்றும் இருக்கைகளும் உலாச் சாலையும்


முசுப்பாற்றும் இருக்கைகள்


மலை குன்றினை ஊடறுத்துச் செல்லும் மேம்பாலங்கள்


கீழும் மேலும் வாகனங்கள்


மேம்பாலங்களின் நிழலில் வாகனத் தரிப்பிடம்


உயரத்தில் மேம் பாலங்கள்


குன்றின் ஊடே ஊடறுத்துச் செல்லும் சுரங்கப்பாதைக்கான மேம்பாலம்


மேம் பாலங்கள் கடல் மேல்


அகன்ற உலாச்சாலைகள்


முசுப்பாற்றும் கறுங்கல் இருக்கைகளும் உலாச்சாலையும்


மேம்பாலங்கள். எதிரே தெரிவது, தொடருந்து இரட்டை மேம்பாலம்


தொடருந்து இரட்டை மேம் பாலத்தின் மேற்தளத்தில் ஒரு தொடருந்து


தொடருந்து இரட்டை மேம் பாலத்தின், கீழ் தளத்திலும் ஒரு தொடருந்து.



எனது பொழுது போக்கு நிழற்படப் பிடிப்பு, இவர்களின் பொழுது போக்கு மீன் பிடிப்பு


கடல் மேல் மேம்பாலம்


கவுலூண் பகுதியைத் தொடும் மேம் பாலம்.


உலாச் சாலையும் அதிபார ஊர்தித் துறையும்


முசுப்பாற்றும் இருக்கையும் அழகு நடைப்பாதையும் அழகு


அழகு அழகு அதனையும் விட, எங்கும் சுத்தமும் பசுமையும் அழகு.


பசுமை மர நிழலும் அதனூடே உலாவுதலும் ஒரு அழகு.


மாடிமனைகளும் முசுப்பாறும் இருக்கைகளும்


மேம்பாலத்தில் பேருந்து, நடைப்பாதையில் இருமருங்கிலும் பசுமை கண்ணுக்கு விருந்து.


மேம் பாலத்தின் கீழ்



. . .
. . .
ஹொங்கொங் நாட்டில் மாடி மனைகள், மேம் பாலங்கள், நவீன வசதிகள் எல்லாவற்றையும் விட காணும் இடங்கள் எல்லாம் கண்ணுக்கு சுத்தமாக காட்சியளிப்பதே அழகிலும் அழகானது; மனதுக்கு இதமானது. சிங் யீ தீவிலும் அதுவே எனக்கு அழகாகப் பட்டது.

மீண்டும் ஹொங்கொங் நாட்டின் இன்னொரு நகர்வலத்தில் சந்திப்போம்.

நன்றி!
அன்புடன் அருண் HK Arun