
1842 ஆம் ஆண்டு பிரித்தானியரின் வருகைக்கு முன்பு, தற்போது "எபர்டீன்" (Aberdeen) என்றழைக்கப்படும் இடத்திற்கும், "அப் லெய் ச்சாவ்: (Ap Lei Chau) எனும் குட்டித்தீவுக்கும் இடையிலான சிறிய குடா பகுதியை குறிக்கும் ஒரு பெயராகவே "ஹொங்கொங்" என அப்பகுதி வாழ் மீனவர்கள் தம் பேச்சு வழக்கில் அழைத்தனராம். இந்த சிறிய குடா பகுதியே பிரித்தானிய கப்பற் படையினருக்கும் இத்தீவின் பூர்வக் குடிகளான மீனவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது. சீனாவின் முத்து ஆற்றின் (Pearl River) முகத்துவாரமாகவும், நன்னீர் உற்புகும் கடல் பகுதியாகவும் அமைந்திருப்பதனால், இக்கடல் பரப்பின் நீர் சுவையானதாகவும் நறுமணமுடையதாகவும் இருக்கின்றது என்பது இங்கு வாழ் மீனவர்களின் கூற்றாகும். அதனாலேயே இவர்கள் இக்கடல் பகுதிக்கு "நறுமணம் வீசும் துறைமுகம்" எனும் பொருளில் "ஹொங்கொங்" என்று அழைத்தனராம். இன்றும் இக்கடல் பரப்பின் நீர் உப்பு சுவை அற்றதாகவே இருக்கின்றது. இந்த கடலில் பிடிக்கப்படும் மீன்களும் நன்னீர் மீன்கள் (குளத்து மீன்கள்) போன்று உப்பற்றதாகவே இருக்கின்றது.
அதன்பின் இத்தீவு பிரித்தானியரின் ஆட்சிக்கு உற்பட்டப் பொழுது, முழு ஹொங்கொங் தீவுப் பகுதியையும் அதனை அண்டிய கடல் பகுதியையும் "ஹொங்கொங்" என்று பிரித்தானியர்களால் அழைக்கப்பட்டதாம். (Ref) (மேலுள்ள படத்தில் செவ்வட்டம் இட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)



அதனைத் தொடர்ந்து இன்று ஹொங்கொங் தீவுப்பகுதியும், கவ்லூண் தீபகற்பப் பகுதியும், ஷம் சுன் ஆற்றின் தெற்காக உள்ள அகன்ற தீபகற்பப் பகுதியுடன் 262 குட்டித் தீவுகளையும் உள்ளடக்கிய "புதியக் அரசக்கட்டுப்பாட்டுப் பகுதி" (New Territories) உம் சேர்த்து பிரித்தானிய ஆட்சிக்கு உற்பட்ட முழு நிலப்பரப்பையும் குறிக்கும் பெயராகவே "ஹொங்கொங்" என்று அழைக்கப்படுகின்றது.
1997 ஆம் ஆண்டு ஹொங்கொங் ஆட்சியை சீனாவிடம் பிரித்தானியா கையளித்ததன் பின், சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக அழைக்கப்பட்டாலும், அதே நில எல்லைகளையும் கடல் எல்லைகளையும் கொண்டு "ஹொங்கொங்" தனித்துவமான ஆட்சி அதிகாரங்களுடன் தொடர்ந்தும் இருக்கின்றது.
தொடர்புடைய இடுகை: ஹொங்கொங் வரலாறு
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
No comments:
Post a Comment