இந்தத் தீவை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கூறமுடியும். இந்த நான்கில் ஒரு பகுதியான வடகிழக்கு நிலப் பகுதி மட்டுமே மக்கள் வசிப்பிடமாக உள்ளது. வசிப்பிடங்கள் எனும் போது அவை மாடிமனை குடியிருப்பு தொகுதிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. எல்லாம் 30 மாடிகளுக்கும் மேலான மாடிமனை கட்டிடங்களாகும். குறிப்பாக இம்மாடிமனை குடியிருப்புத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ள கடல் கரையோரப் பகுதிகள் நிரப்பப்பட்டு, சுற்றிலும் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இம்மதில் சுவருக்களுக்கு உற்புறமாக அழகிய பூங்காக்களும், முசுபாறும் இருக்கைகளும், கடலோர உலாச்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை காண்போர் கண்களுக்கு இதமான காட்சியையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.

இத்தீவின் பெரும் பகுதி மக்கள் வாழா காடாகவே இருக்கின்றது. இவை ஹொங்கொங் தேசிய வனத்துறையினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இப்பகுதிகளில் ஹொங்கொங் அரசின் வெவ்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கவ்லூன், புதிய கட்டுப்பாட்டகம் பகுதிகளுக்கான போக்குவரத்து மேம்பாலங்கள் இத்தீவின் மலைக்குன்றுகள் ஊடாகவே அமைக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மேம்பாலங்கள் இத்தீவை ஊடறுத்தே செல்கின்றன. சில பாதைகள் மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகளாகவும், சில மலைக்குன்றின் மேல் தொட்டு செல்லும் மேம்பாலங்களாகவும் உள்ளன.
மக்கள் தொகை

அதன்பின்னர் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிரித்தித் திட்டங்களை தொடர்ந்து வசிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளில் வசிப்போர் எண்ணிக்கை ஐம்பது மடங்கு உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 200,400 பேர் இத்தீவில் வசிப்பதாக புள்ளிவிபர அறிக்கைகள் கூறுகின்றன. அதில் கணிசமானோர் ஐரோப்பியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நகர்வலப் பார்வை

நான் இத்தீவிற்கு டை கொக் சுயி எனும் இடத்தில் இருந்து MTR தொடருந்தில் பயணித்தேன். சாதாரணமாக நிழத்தடி சுரங்கப் பாதையில் ஓடும் மின்சார துரிதகதி தொடருந்து நம் சொங் (Nam Cheong) தொடருந்தகத்தில் இருந்து நிலமட்டத்திற்கு மேலே உயர்ந்து மேம்பாலத்தின் ஊடாக பயணிக்கும். அதனால் வெளிப்புறக் காட்சிகளையும் பார்த்த வண்ணமே பயணிக்கக் கூடியதாய் இருந்தது. நில மட்டத்திலிருந்து உயரத்தில் மேம்பாலம் ஊடாக பயணிக்கும் தொடருந்து, கவ்லூன் நிலப்பரப்பில் இருந்து கடல் மேல் பலநூறு அடிகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தின் ஊடாக சிங் யீ தீவை நோக்கி விரைகின்றது.
இடையே மா வான் (Ma Wan Island) எனும் குட்டித் தீவின் மலை முகட்டை தடவிய வண்ணம் கடலின் மேலே உயரத்தில் மேம்பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் தொடருந்து, சிங் யீ தீவின் Martime Square வணிகக் கட்டிடத்தின் நான்காவது நின்றது. ஆம்! தொடருந்தகம் வணிகக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. சிங் யீ MTR தொடருந்து நிறுத்தகத்தின் வரைப்படம் கீழே உள்ளது; பார்க்கவும்.
பேருந்து நிறுத்தகத்தில் இருந்து படிகள் ஊடாக அப்படியே நிலமட்டத்திற்கு இறங்கி, கடற்கரை உலாச்சாலையூடாக நடந்தேன். எதிரே மாடி மனைகளும், மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அழகாக காட்சியளித்தன. ஒவ்வொரு கட்டிடமும் ஹொங்கொங்கின் பொருளாதார வளர்ச்சியை சொல்லிக்காட்டின.
குறிப்பாக உலாச் சாலையும், உலாவுவோருக்கான இடையிடையே அமைக்கப்பட்டிருக்கும் முசுபாறும் இருக்கைகளும், கண்களுக்கு இதமான பசுமையான மரங்களும், அதிப்பார ஊர்தி ஏற்றிறக்கும் துறையும் இத்தீவின் சிறப்பாகும்.
நிழற்படத்தில் காணப்படும் தொடருந்து மேம்பாலம் இரட்டை மேம்பாலமாகும். அதிலும் இரண்டிரண்டு பாதைக் கோடுகளாக மொத்தம் நான்கு பாதைக் கோடுகள் உள்ளன. (நிழல்படத்தில் காண்க)
இத்தீவில் மட்டுமல்ல ஹொங்கொங் நாட்டின் எல்லா இடங்களிலும் இதே சுத்தத்தைக் காணலாம். இந்த சிங் யீ (Tsing Yi) தீவிலும் அதுவே எனக்கு அழகாகப் பட்டது.
குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகள் சுத்தம் பேணல் என்றால் என்ன, சுகாதார நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பவற்றை இதுப்போன்ற நாடுகளுக்கு பயணித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆவல். கால் இல்லாதவனை செருப்பு இல்லாதவன் பார்த்து ஆறுதல் அடைவது அல்ல உயர்வு. மாறிவரும் உலக ஒழுங்குகளைப் பார்த்தேனும் திருந்திக்கொள்ள முனைவதுதான் உயர்வு!
மேலும் இத்தீவின் நிழற்படத் தொகுப்பில் 50 படங்கள் பதிவேற்றியுள்ளேன். அப்படங்களைப் பாருங்கள். நான் சொல்வது உண்மையா என்பதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun