"மணம்" என்னும் தமிழ் சொல் எதை குறிக்கின்றது? என் நண்பருடன் எழுந்த “மணம்” எனும் தமிழ் சொல் தொடர்பாக எழுந்த தமிழ் மொழியாய்வு விவாதம்.
நானும் என் நண்பர் ஒருவரும் உணவகம் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றோம். சாப்பாட்டைப் பார்த்ததுமே நண்பர் மணமாக இருக்கின்றது என்றார். அதாவது வாசனையாக இருக்கின்றது எனும் பொருளில்.
எனக்கு அது வாசனையாக தெரியவில்லை. நான் "மணம்" என்றால் என்ன என்றேன், இது தான் விவாதம்.
"மனம்" என்று மனதை குறிக்கும் சொல் ஒன்றும் உள்ளது அது வேறு.
நான் கூறுவது மணம்.
எடுத்துக்காட்டாக; திருமணத்தையும் "மணம்" என்று சுருக்கிக் கூறும் வழக்கும் சிலரிடம் காணப்படுகின்றது.
அப்படியானால் தமிழ்மணம்.
தமிழ் – திருமணமா? நிச்சயமாக அப்படியில்லை.
மணம் என்றால் வாசனை பரவச்செய்யும், மண விருப்பத்திற்கு ஒன்றானதாக குறிப்பிடுகின்றோம். அதாவது வாசனை.
மணம் – வாசனை என்றால், தமிழ்மணம் – தமிழ்வாசனை என்று பொருள் தருகின்றது என்று வைத்துக்கொள்ளலாம். (தமிழ் மொழியின் வாசனை)
தமிழ் வலைப்பதிவுலகின் முன்னனித் திரட்டியான "தமிழ்மணம்" எனும் திரட்டி வலைப்பதிவர்களின் ஆர்வத்தையூட்டி அவர்களது ஆக்கங்களை உலகெங்கும் நறுமணம் பரவச்செய்கின்றது. நான் அந்த தமிழ்மணம் பற்றி பேசவில்லை.
"மணம்" எனும் தமிழ் சொல் பற்றியே பேசுகின்றேன்.
அவ்வாறு “மணம்” வாசனையென்றால், நறுமணம் எனும் சொல் எதைக்குறிக்கின்றது?
நறுமணம் நல்ல மணம் என்றால், துர்மணம் கூடாத, விரும்பத்தகாத மணம் அப்படியல்லாவா?
அப்படியானால் மணம்?
நண்பர் கடைசி மட்டும் எனது கருத்திற்கு உடன் படவில்லை.
எனது கருத்து இதுதான்.
என்னைப்பொருத்த மட்டில் மணம் எனும் சொல், நறுமணத்தையோ, துர்மணத்தையோ குறிப்பது அல்ல. மாறாக மணத்தை நுகர்ந்து அது நறுமணமா, துர்மணமா என்பதை வெளிப்படுத்த உபயோகிக்கப்படும் ஒரு பொதுவான நுகர்வை குறிக்கும் சொல்.
சரி இது தொடர்பான உங்கள் கருத்தையும் கூறுங்கோவன்.
5 comments:
நாற்றம் என்றாலும் மொழியடிப்படையிலே -நறுமணம்/துர்மணம் வேறுபிரிக்காத -மணம் என்பதுதானே :-)
பயன்பாட்டிலே அப்படியாவிருக்கிறது?
இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பதே சரியெனப் படுகிறது.
அதுபோல் பெயரிலி சொன்னமாதிரி நாற்றம் என்பதும் பொதுவான சொல்லே; ஆனால் இன்று அதை கெட்ட மணம் என்ற பொருளிற்றான் பயன்படுத்துகிறோம்.
பெயரிலி,
வசந்தன் இருவரதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
அருண்
இப்படி எம்மிடம் பல சொற்கள் இருக்கின்றன.
மொழியைப் பேசுவதில் பேதம் இருப்பது போல சில சில இடங்களில் சில சொற்களைப் பிரயோகிக்கும் விதத்திலும் பேதம் இருக்கிறது.
நான் வாழ்ந்த இடத்தில் (பருத்தித்துறை, புலோலி மேற்கு) மணம் என்று சொன்னால் மணக்குது என்ற சொல்லால் துர் நாற்றம் என்பதையே குறிக்கிறார்கள். கூடாத மணத்தைத்தான் மணக்குது, சரியான மணம் என்பார்கள். அளவுக்கதிகமாக மணந்தால் நாறுது என்பார்கள். நானும் அப்படித்தான் சொல்வேன்.
நல்லதாக இருந்தால் நல்ல வாசம் என்போம்.
இதே நேரம் நல்ல மணம், குணத்தோடை கறி அருமையாக இருக்கிறது என்றும் சொல்வார்கள்.
நான் புலோலி மேற்கு. எனது கணவர் புலோலி கிழக்கு.
எனது வீட்டு சில தமிழ் சொற்களுக்கும், அவர்கள் வீட்டு சில தமிழ் சொற்களுக்கும் இடையிலேயே வித்தியாசங்கள் இருக்கின்றன.
வருகைக்கு மிக்க நன்றி அக்கா.
மேலும் பலக் கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.
//மணம் என்று சொன்னால் மணக்குது என்ற சொல்லால் துர் நாற்றம் என்பதையே குறிக்கிறார்கள்//
ஆம் இது பொதுவாக யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் உது போன்றே பாவிக்கப்படுகின்றது.
Post a Comment