முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Monday, September 1, 2008

"ரகரம், றகரம்" வராதச் சீனர்கள்

ஹொங்கொங் வந்தடைந்தச் சில நாட்களிலேயே ஹொங்கொங் மொழியான "கண்டோனீஸ்" பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. நாம் ஹொங்கொங் வந்தடைந்ததும் வசித்தப் பகுதி "கம் தின்" எனும் ஒரு கிராமப் பகுதியிலாகும். இது ஹொங்கொங் தீவிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. இங்கிருந்து சில மைல்கள் சென்றால் சீனாவின் எல்லையை எட்டிவிடலாம். இங்கு வசிக்கும் ஹொங்கொங்கர்களில் 98% வீதமானோருக்கு ஆங்கிலம் துப்பரவாகத் தெரியாது. எமக்கோ ஹொங்கொங்கரின் மொழியான கண்டோனீஸ் 100% வீதமும் தெரியாது. இடைமொழியான ஆங்கிலத்தில் பேசினால், சிரித்துக் கொண்டே "இங்கிலீஸீ மவ்வா" என்பார்கள். ஒரு சிலருக்கு ஒருசிலச் சொற்கள் மட்டும் தெரியும். அந்த சிலச்சொற்களில் ஒன்றுதான் "இங்கிலீஸீ". சில கடைகளுக்குச் சென்று பொருற்களின் விலையை கேட்டால் உடனே கணிப்பானை கையில் எடுத்துவிடுவர். அதன் பின்னரான உரையாடல் மொழி சைகை மொழிதான். இவ்வாறு சைகை மொழியில் பேச ஆரம்பித்து காலப்போக்கில் ஒரு சில கண்டோனீஸ் சொற்கள் நாவிற்கு பழக்கமாகின.

சில கண்டோனீஸ் மொழி ஒலிப்புகள் அடித்துப் போட்டாலும் நமது நாவிற்குள் எழாது. அதன் ஒலிப்புகளை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதிக்காட்டவும் முடியாது. அத்தனை வேறுப்பாடுகள். இருப்பினும் யாராவது ஒருவரை நண்பராக்கிக் கொண்டால், கண்டோனீஸ் மொழி பேசிப் பழகலாம் எனும் ஒர் எண்ணம் என்னுள் இருந்தது.

காலப்போக்கில் நாங்கள் வசித்த இடமான "கம் தின்" எனும் இடத்தில் இருந்து "சிம் ஷா சுயீ" எனும் ஹொங்கொங் தீவுக்கு அன்மித்தப் பகுதியில் வந்து வசிக்கும் நிலை தோன்றியது.

இங்கே தான் எனது "கண்டோனீஸ்" மொழி பேசிப் பழக வேண்டும் எனும் ஆர்வத்திற்கு ஒரு நண்பர் கிடைத்தார். ஆம்! ஆங்கிலம் தெரிந்த ஹொங்கொங் பெண். பெயர் "லோசி" என்றாள். அது என்ன லோசி? "லோசி" என்பது சீனப் பெயரா? என்று கேட்டேன். இல்லை "இங்கிலீ..ஸீ.." என்றாள். எழுதிக்காட்டினாள் "Rosi". அட! "றோசி" என்பதைத் தான் "லோசி" என எழுதிகாட்டியுள்ளாள் என்பது புரிந்தது. கூடவே இவளுக்கு "றோ" ஒலிப்பு வருவதில்லை என்பதையும் புரிந்துக்கொண்டேன்.

எனது பெயரை "அருண்" என்று சொல்லிக்கொடுத்தும், அவள் "அலுன்" என்றே உச்சரித்தாள். நானும் பலமுறை திருத்திக் கூறியும் அவளது உச்சரிப்பில் மாற்றம் வரவில்லை. நான் எ. ஆர். யு. எண் = அருண் என்று ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி அழுத்தமாக வாசித்துக்காட்டினேன். அவளும் அழுத்தமாக உச்சரித்தாள் "அ-ல்-லு-ண்' என்று.

சரி இவள் தான் இப்படி என்றால், இவளது நண்பர்களும் அப்படித்தான் உச்சரிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் ஹொங்கொங் சீனர் எல்லோருக்குமே "ர, ற வரிசை" ஒலிப்புகள் வராது என்பதை பின்னராக புரிந்துக்கொண்டேன்.

இதனை அன்மையில் "தசவதாரம்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு ஹொங்கொங்லிருந்து சென்னை சென்றிருந்த ஜக்கி சான், (Jackie chan) கருணாநிதியின் பெயரையும் ரவிச்சந்திரனின் பெயரையும் எப்படி உச்சரிக்கிறார் என்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

வலைக்காட்சியை பார்த்துவிட்டு கூறுங்கள் ஜக்கி சான் எப்படி கருணாநிதி, ரவிச்சந்திரன் எனும் பெயர்களை ஒலிக்கிறார் என்று!

2 comments:

Victor Suresh said...

அருண், சுவையாக எழுதுகிறீர்கள். ஹாங்காங் அருகே கிராமம், அங்கே ஆங்கிலம் நிறையப் பேருக்கு தெரியாது என்பதெல்லாம் புதுத் தகவல்கள். ஹாங்காங் என்றாலே நினைவுக்கு வருவது அங்குள்ள உயர்ந்த கோபுரங்களும், மக்கள் நெருக்கமும்தானே. லோசியின் உதவியுடன் கான்ற்றோனிஸ் பயின்று கொண்டு எங்களுக்கும் சொல்லித் தருவீர்கள் என்று நம்பலாமா?

HK Arun said...

வணக்கம் ஏவிஎஸ்

சில கண்டோனீஸ் மொழி ஒலிப்புகள் அடித்துப் போட்டாலும் நமது நாவிற்குள் எழாது. அதன் ஒலிப்புகளை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதிக்காட்டவும் முடியாது. அத்தனை வேறுப்பாடுகள்.

இருப்பினும் அன்றாடம் புழக்கத்தில் பயன்படும் சில சொற்களை இவ்வலைப்பதிவில் இட்டு வைப்பதாக உள்ளேன்.

சிறு திருத்தம்:
//ஹாங்காங் அருகே கிராமம்,// ஹாங்காங் அருகே கிராமம் அல்ல. ஹாங்காங் ஆட்சிப் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயக் கிராமங்களும் உள்ளன.