
இங்கே ஹொங்கொங் சீனர்களைத் தவிர அமெரிக்கர், இங்கிலாந்தினர், அவுசுதிரேலியர், கனேடியர், யப்பானியர், பிலிப்பினியர், இந்தோனேசியர், இந்தியர், பாக்கிஸ்த்தானியர், நேபாளவர், தாய்லாந்தினர் என இன்னும் பல்வேறு மொழியினரும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லோரும் பொதுவாகவே ஆங்கில வழியிலேயே தமது கல்வியை கற்கின்றனர். சீன மொழி ஒரு விருப்பு பாடமாகவே இருந்து வந்தது.
2007 ம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் நாளில் இருந்து சீனம் அல்லாத வேற்று மொழிப் பாடசாலைகளானாலும் சீனமொழிப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஹொங்கொங் நாட்டின் நிதியுதவியுடன் நடாத்தப்படும் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் சீன மொழி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் எனும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. "டொக்டர் அர்தர் லீ" (Dr. Athur Lee) என்பவரே இவ்வதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதுவரை வேற்று மொழியினரான பலர், சீன மொழியை கற்காமல் இருந்தனர். தற்போது எல்லோரும் கற்க வேண்டியக் கட்டாயத்திற்கு உற்பட்டுள்ளனர். அதுவும் முதலாம் வகுப்பிலிருந்தே.
எந்த நாட்டவரானாலும், என்ன மொழிப் பேசுவோரானாலும் இந்த நாட்டில் கல்வி கற்போர் இந்நாட்டு மொழியான (கண்டோனீஸ்) மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்பது இந்நாட்டின் சட்டமாகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் அவரவர் நாடுகளில் தத்தம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வேலையில், தமிழர் தாயகமான தமிம்நாட்டிலோ தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டுமா? வேண்டாமா? என விவாதித்து வருகின்றனர். இதனை என்னவென்று கூறுவது?
அதேவேளை ஹொங்கொங்கில் தமிழ் ஆர்வளர்களால் நடாத்தப்படும் "தமிழ் மொழி" வகுப்புகள் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஆண்டு விழாவும் எடுத்தனர். இது போன்ற செயல்பாடுகள் எத்தனைப் பாராட்டுக்குறியது!
பெயரளவில் மட்டுமே "நாடு" எனும் அடைமொழியைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைப் போன்று அல்லாமல், தமிழருக்கு என ஒரு நாடு இருந்தால் இதுப் போன்ற விவாதங்களிற்கு ஒருப்போதும் இடமிருக்காது.