முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Monday, September 1, 2008

"ரகரம், றகரம்" வராதச் சீனர்கள்

ஹொங்கொங் வந்தடைந்தச் சில நாட்களிலேயே ஹொங்கொங் மொழியான "கண்டோனீஸ்" பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. நாம் ஹொங்கொங் வந்தடைந்ததும் வசித்தப் பகுதி "கம் தின்" எனும் ஒரு கிராமப் பகுதியிலாகும். இது ஹொங்கொங் தீவிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. இங்கிருந்து சில மைல்கள் சென்றால் சீனாவின் எல்லையை எட்டிவிடலாம். இங்கு வசிக்கும் ஹொங்கொங்கர்களில் 98% வீதமானோருக்கு ஆங்கிலம் துப்பரவாகத் தெரியாது. எமக்கோ ஹொங்கொங்கரின் மொழியான கண்டோனீஸ் 100% வீதமும் தெரியாது. இடைமொழியான ஆங்கிலத்தில் பேசினால், சிரித்துக் கொண்டே "இங்கிலீஸீ மவ்வா" என்பார்கள். ஒரு சிலருக்கு ஒருசிலச் சொற்கள் மட்டும் தெரியும். அந்த சிலச்சொற்களில் ஒன்றுதான் "இங்கிலீஸீ". சில கடைகளுக்குச் சென்று பொருற்களின் விலையை கேட்டால் உடனே கணிப்பானை கையில் எடுத்துவிடுவர். அதன் பின்னரான உரையாடல் மொழி சைகை மொழிதான். இவ்வாறு சைகை மொழியில் பேச ஆரம்பித்து காலப்போக்கில் ஒரு சில கண்டோனீஸ் சொற்கள் நாவிற்கு பழக்கமாகின.

சில கண்டோனீஸ் மொழி ஒலிப்புகள் அடித்துப் போட்டாலும் நமது நாவிற்குள் எழாது. அதன் ஒலிப்புகளை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதிக்காட்டவும் முடியாது. அத்தனை வேறுப்பாடுகள். இருப்பினும் யாராவது ஒருவரை நண்பராக்கிக் கொண்டால், கண்டோனீஸ் மொழி பேசிப் பழகலாம் எனும் ஒர் எண்ணம் என்னுள் இருந்தது.

காலப்போக்கில் நாங்கள் வசித்த இடமான "கம் தின்" எனும் இடத்தில் இருந்து "சிம் ஷா சுயீ" எனும் ஹொங்கொங் தீவுக்கு அன்மித்தப் பகுதியில் வந்து வசிக்கும் நிலை தோன்றியது.

இங்கே தான் எனது "கண்டோனீஸ்" மொழி பேசிப் பழக வேண்டும் எனும் ஆர்வத்திற்கு ஒரு நண்பர் கிடைத்தார். ஆம்! ஆங்கிலம் தெரிந்த ஹொங்கொங் பெண். பெயர் "லோசி" என்றாள். அது என்ன லோசி? "லோசி" என்பது சீனப் பெயரா? என்று கேட்டேன். இல்லை "இங்கிலீ..ஸீ.." என்றாள். எழுதிக்காட்டினாள் "Rosi". அட! "றோசி" என்பதைத் தான் "லோசி" என எழுதிகாட்டியுள்ளாள் என்பது புரிந்தது. கூடவே இவளுக்கு "றோ" ஒலிப்பு வருவதில்லை என்பதையும் புரிந்துக்கொண்டேன்.

எனது பெயரை "அருண்" என்று சொல்லிக்கொடுத்தும், அவள் "அலுன்" என்றே உச்சரித்தாள். நானும் பலமுறை திருத்திக் கூறியும் அவளது உச்சரிப்பில் மாற்றம் வரவில்லை. நான் எ. ஆர். யு. எண் = அருண் என்று ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி அழுத்தமாக வாசித்துக்காட்டினேன். அவளும் அழுத்தமாக உச்சரித்தாள் "அ-ல்-லு-ண்' என்று.

சரி இவள் தான் இப்படி என்றால், இவளது நண்பர்களும் அப்படித்தான் உச்சரிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் ஹொங்கொங் சீனர் எல்லோருக்குமே "ர, ற வரிசை" ஒலிப்புகள் வராது என்பதை பின்னராக புரிந்துக்கொண்டேன்.

இதனை அன்மையில் "தசவதாரம்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு ஹொங்கொங்லிருந்து சென்னை சென்றிருந்த ஜக்கி சான், (Jackie chan) கருணாநிதியின் பெயரையும் ரவிச்சந்திரனின் பெயரையும் எப்படி உச்சரிக்கிறார் என்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

வலைக்காட்சியை பார்த்துவிட்டு கூறுங்கள் ஜக்கி சான் எப்படி கருணாநிதி, ரவிச்சந்திரன் எனும் பெயர்களை ஒலிக்கிறார் என்று!

Thursday, August 7, 2008

இலங்கையில் தமிழர் வரலாறு

இலங்கை ஒரு தீவு. அது இரண்டு தேசங்களைக் கொண்டது. ஒன்று தமிழர் தேசம். மற்றையது சிங்களர் தேசம். ஆனால் இலங்கையின் வரலாறு சிங்கள தேசத்தின் வரலாறாக மட்டுமே எழுதப்பட்டு அல்லது சித்தரிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்ததிலிருந்து இன்று வரையும் தொடர் அவலங்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இலங்கைத்தீவில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இரு இனங்களான சிங்கள இனமும், தமிழினமும் தனித்தனியாக ஆட்சியுரிமை செலுத்தி வந்தன. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1635-1795) தமிழீழ நிலப்பகுதிகளை மரபு வழியாகப் பேணி தமிழர்களுக்கென தனி நிர்வாகத்தையும், சிங்களவருக்கென தனி நிர்வாகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

கி.பி.1796 இல் பிரித்தானியரின் ஆட்சிக்குள் வந்தன. கி.பி.1619 இல் போர்துக்கேய அரசைச் சென்றடைந்த தமிழீழ இறைமை கி.பி.1658 இல் ஒல்லாந்தரையும், பின்னர் கி.பி.1796 இல் பிரித்தானியரையும் சென்றடைந்து, கி.பி.1833 தொடக்கம் கி.பி.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் நாள் வரை 105 ஆண்டுகளுக்குச் சிங்கள நிலமும், தமிழ் நிலமும் ஒரே ஆட்சி முறையில் தொடர்ந்து வந்தது.

இலங்கையிலிருந்து அகன்ற பிரித்தானியர் ஒற்றையாட்சி முறையின் கீழ் முழுமையான ஆட்சிப் பொறுப்பை சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்தனர். அதுவே அத்தனைக் கேடுகளுக்கும் மூலக்காரணமானது.

தொடக்க காலத்தில் இருந்து தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அப்போதைய தமிழ்த் தலைமைகள் தமிழரின் உரிமைகளுக்காக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

1958, 1961 இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழர்களின் போராட்டங்களை சிங்களத்தரப்பு நசுக்கியது. மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் தலைமைகளுடன் உடன்படிக்கைகளை எழுதி நிறைவேற்றாது கிழித்தெறிந்தனர்.

ஏமாந்த தமிழ் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரே தமிழ்த் தலைமை உருவாக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர். தமிழ் மக்கள் அனைவரும் அதனையே முழுமையாக ஆதரித்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினைக் கொண்டு வந்து தமிழர்கள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். சிங்கள அரசு 1983 இல் வரலாறு காணாத பாரிய இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது.

அறவழியில் போராடி தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியாது போன தமிழர் போராட்டம், பின்னர் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

இப்போராட்டம், சில சுய இலாபங்களுக்காக குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களின் இலங்கை அரசின் அடிவருடிக் கொள்கையினால் பல பின்னடைவுகளை சந்தித்தது, சந்தித்தே வருகின்றது. எம்மினத்தின் போரட்டச் சக்தியை சீர்குலைக்கும் நோக்கில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்களுக்கு ஆயுதக்குழுவாகவும் அரசியல் பகடைக்காய்களாவும் மாறி தமிழர்களின் நலனுக்கு தமிழனே, தமிழினத் துரோகிகளாக உண்மையை பொய்மையாக்கி, பொய்மைக்கு துணைப்போகும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைத் தமிழரின் வரலாறும், போராட்டத்தின் நியாயத் தன்மையும் தக்கச் சான்றுகளுடன் வெளிவருவது காலத்தின் தேவையாகியுள்ளது.

இத்தேவையை பூர்த்திச் செய்யும் முகமாக; கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் பல்வேறு மட்டத்தினரையும் கருத்திற்கொண்டு பல மூல ஆவணங்களின் ஆதாரங்களுடன் ஆய்வுசெய்து உள்ளதை உள்ளவாறே ஒரு வரலாற்று ஆவணத்தை நூலாக எழுதியுள்ளார். இச்செய்தி தமிழர்களை பொருத்தமட்டில் மகிழ்ச்சியானச் செய்தி.

இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்நூல் 10 அத்தியாயங்களை உள்ளடக்கியது.

இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்சு, சுவிற்சலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக்காப்பகங்களில் இந்நூலாசிரியர் பல மாதங்களாகத் தேடி எடுக்கப்பட்ட முக்கியமான ஆதாரங்கள் இந்நூலின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் போர்த்துக்கேய ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள், டச்சு ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள், பிரித்தானிய ஆவணக்காப்பகங்களில் கிடைக்கப்பெற்ற முதல்தர ஆவணங்கள், தொல்லியல் சான்றுகள், கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவற்றின் ஆதாரங்களுடன் எதுவித பக்கசார்பும் இன்றி உள்ளதை உள்ளவாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில்; அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை பல்கலைக்கழக தொல்லியலாளர்களால் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளில் பெறப்பட்ட தொல்லியல் சான்றுகளும், கல்வெட்டுகளும் இந்த ஆய்வின் முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றையும் போராட்ட நியாயப்பாடுகளையும் அறிய விரும்புவோர் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு நூல். ஒவ்வொரு தமிழனது வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். எமது அடுத்த தலைமுறைக்கு தமிழனில் வரலாற்று ஆவணமாக கையளிக்க வேண்டிய நூலாகும்.

இந்நூல் குறித்த சில குறிப்புகள்

இங்கேயும் பார்க்கலாம்

பிற்குறிப்பு:

மேற்கூறிய நூலிற்கான மூலதாரங்கள் சேகரிக்கப்பட்ட விதம், பன்னாட்டு ஆய்வுகள் தொடர்பான விளக்கங்கள், வெளிநாட்டு நூலகங்கள், அவணக்காப்பகங்கள் போன்றவற்றில் குவிந்து கிடக்கும் தமிழரின் வரலாற்று குறிப்புகள் குறித்த விபரங்களை அறிந்துக்கொள்ள விரும்புவோர் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முருகர் குணசிங்கத்தாரின் "Primary Sources for History of the Sri Lankan Tamils" எனும் நூலை கட்டாயம் வாங்கிப் பார்க்கவும். (தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் ஒரே நூலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Monday, July 14, 2008

தமிழ் இலக்கணம் கற்க

தாயகத்தின் தென் பிரதேசமான வவுனியாவில் பேரின்பராஜ் ரவிகாந்தன் என்பவர் "சோழர் தலைவன்" எனும் புனைப்பெயரில் "வவுனியா தமிழ்" எனும் கூகிள் குழுமத்தில் இணைந்து எளிய வழியில் தமிழ் இலக்கணப் பாடங்களை வழங்கி வருகின்றார்.

உள் நாட்டுப் போரின் பல பின்னடைவுகளின் நடுவில், தாம் பிறந்த மண்ணின் மணம் வீசச் செய்யும் இவர் போன்றோரின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவைகள். மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டியவைகள்.

அந்நிய மொழிகளை இலக்கணத்துடன் கற்க முயற்சிக்கும் நம்மில் பலருக்கு, தாய்மொழியாம் தமிழின் இலக்கண விதி முறைகள் தெரிவதில்லை.

பாடசாலைகளில் கல்வி கற்கும் காலங்களில் தமிழ் இலக்கணம் கற்பதற்கு பெரிதாக ஆர்வம் இல்லாத பலர், காலம் கடந்து கற்க முற்படுவதையும் இன்று இணையத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்நிய சூழ்நிலையில் தமிழ் இலக்கணம் முறையாகக் கற்க வாய்ப்பில்லாதவர்களும் நிறையவே இருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் சோழர் தலைவனின் தமிழ் இலக்கணம் கற்பித்தல் முயற்சி பயன்மிக்கதாக அமைகின்றது.

இதோ சுட்டிகள்:

தமிழ் இலக்கணம் கற்போம் 01

தமிழ் இலக்கணம் கற்போம் 02

தமிழ் இலக்கணம் கற்போம் 03

தமிழ் இலக்கணம் கற்போம் 04

தமிழ் இலக்கணம் கற்போம் 05

தமிழ் இலக்கணம் கற்போம் 06

தமிழ் இலக்கணம் கற்போம் 07

தமிழ் இலக்கணம் கற்போம் 08

Thursday, June 5, 2008

ஈழத்தமிழரின் தொன்மை

ஈழம், இலங்கை, லங்கா,சிறீலங்கா, சீலான், சீலாவோ,சிலோன் முதலிய பல்வேறு பெயர்களைக் கொண்ட நாடு இந்துப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறு தீவாகும். இத்தீவு இந்தியா அல்லது பாரதம் எனப்படும் ஒரு பெருநாட்டின் கீழ்பகுதியல் அதனோடு ஒரு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்துள்ளது. ஈழத்தில் தமிழர், சிங்களவர் என்ற இரு மொழிபேசும் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு நெருங்கிய தொடர்புகொண்ட மக்களே இந்தியாவிலும் வாழ்கின்றனர்

இவ்விரு நாடுகளும் 4300 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஒரு பெருநாட்டின் பகுதிகளாக இணைந்து இருந்தன. மூன்று முறை நிகழ்ந்த கடல் பரவலின்முன் கடலற்ற பகுதியில் தெற்குநோக்கிப் பரந்த பெருநாடக இருந்தது. ஞாயிறினின்று சிதறி விழுந்த அனற்பிழம்பே பின் பூமியானது. அதில் முதலில் குளிர தொடங்கிய நிலம் பற்றிப் பேராசிரியர் மது. ச. விமலானந்தம் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....”

- தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.

இவ்வாறு தோன்றிய பரந்த தமிழ்நாடு பெருமளவில் கடல்கோளுக்குட்பட்டது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இப்பேரழிவைப் பின்வருமாறு பாடுகின்றார்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குமரிக் கோடுங்
கொடுங்கடல் கொள்ள"

இறையனார் களவியலுரையும் இளம்பூரணர் தொல்காப்பிய உரையும் பிறவும் இக்கடல் கோளைக் குறிப்பிடுகின்றன. தமிழ்நிலத்தின் தென்பகுதி கொடிய கடலாற்கொள்ளப்பட்ட போதிலும் நிலைபேறடைந்த வடபகுதி தமிழை அழியாது காத்தது. இந்த வடபகுதி இன்றைய தென்தமிழ்நாடு மட்டுமன்று அதற்கு மேலேயிருந்த வடபகுதியுமாகும். இப்பேரழிவில் அழியாது தப்பிய தமிழ்பகுதியாக ஈழமும் அமைந்தது. தொடர்ந்த இக்கடல்கோளைப் பேராசியர் மா. இராசமாணிக்கனார் பின்வருமாறு விளக்குகின்றார்.

“இலங்கை வரலாற்றில் குறிப்பிடப்படும் மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இது இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தது, இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. இரண்டாம் கடல்கோளில் பேரழிவு நிகழவில்லை. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் நிகழ்ந்தது. இக்காலத்தில் தேவநம்பியதீசன் இலங்கையை ஆண்டான். இது பாரதவரலாற்றில் அசோகன் காலமாகும். இம்மூன்றாவது கடல்கோளினால் ஒரு நூறாயிரம் (இலட்சம்) கிராமங்களும் தொளாயிரத்துப் பத்து மீனவர் சிற்றூர்களும் முத்துகுளிப்போர் வாழ்ந்த நானூறு ஊர்களும் கடலுள் மூழ்கின... இறையானர் அகப்பொருள் உரையில் ஒரு கடல்கோள் தென்மதுரையையும் அழித்தன என்று குறிப்பிட்டார்.”

The Date of Tolkappiyam,
Annals of Oriental Research,
University of Madras
Vol.XIX part II, 1964, Reprint p. 16-17


மேற்கூறிய கருத்தின்மூலம் பெருந்தீவாக இருந்த ஈழம் சிறிய தீவானது எனலாம்

இப்பேரழிவு பற்றி விளக்கம் மது.ச. விமலானந்தம் பின்வருமாறு மேலதிக விளக்கம் தருகிறார்.

“கடல்கொண்ட இதே சமயத்தில்தான் கடலுள் அமிழ்ந்து கிடந்த இமயம் மேலெழுந்தது. தெற்கே கடல்கொள்ள வடக்கே நீர்வடிந்து இமயம் தோன்றியது.”

மேலது.ப.1671

இப்பரந்த குமரிக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழர் வாழ்ந்த நாடாகும். இத் தொடர்பினாலேதான் பின்வந்த ஆரியமொழியின் தாக்கத்தால் இந்தியாவின் மேற்பகுதி ஆரிய நாடாக, தென்பகுதியின் தமிழ்மொழி ஆரியத்தாக்கத்தால் பல திராவிடமொழிகளானது. (மலையாளம், சிங்களம்......)மேலே குறிப்பிட்ட திராவிட மொழிகள் மட்டுமன்றி ஆரியமொழிகளும் தமிழ்ச்சார்புடைய திராவிட மொழிகளே என்பது தமிழக மொழியில் அறிஞர் முனைவர்கு அரசேந்திரன் கருத்தாகும் அது வருமாறு.

“இந்திய ஆரியமொழிகள் என்பன உண்மையில் கொடும் திராவிட மொழிகளே. ஆரியர் இந்தியம் புகுந்த கி.மு. 1500 இன் முன் இந்தியா முழுமையும் வழங்கிய மொழி தமிழே. தமிழ் மிகப்பல கிளைமொழிகளாக வடக்கே செல்லச்செல்ல திரிந்துபோயிற்று. பாவாணர், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் போன்றோர் இவற்றை விளக்கியுள்ளனர். வடவிந்திய மொழிகளை உடைத்துப்பார்த்தால் அவற்றின் உள் ஊற்றாகத் தமிழ் இருப்பது தெரியும். இந்த உண்மை உலகிற்கும் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் தமிழின் வன் கொடுத்திரிபான சமற்கிருதக் கந்தற்பாய் இந்திய மொழிகளின் மேல் பரப்பட்டிருப்பதேயாகும்.”

-தமிழால் தழைத்த சிங்களம். ப.77

ஈழம் என்பது முழுமையும் தொன்மையான தமிழ்ஈழம் என்பது இதுவரை கூறியவற்றால் புலனாகும். ஈழத்தில் சிங்களம் ஒரு மொழியாக உள்ளது. இது பொதுவாக ஆரியமொழியென்று சிங்கள மக்களால் கூறப்படுகிறது. இது பொருத்தமான கருத்தா என்பது ஆராயப்படவேண்டும். தென்னிலங்கையின் தொன்மையான வரலாற்றை ஆராய்வதன்மூலம் இதன் உண்மை தெளிவாகும்.

தென்னிலங்கையின் தொன்மையான வரலாற்றை கூறும் இரண்டு பாளி நூல்கள் முதலில் எழுந்தன. அவற்றுள் ஒன்று பலர் தொடர்ந்தும் எழுதியாதகக் கருதப்படும் தீபவம்சம் (கி.பி.4). இரண்டாவது நூல் மாகாநாயக தேரர் என்ற பௌத்தபிக்கு எழுதிய மகாவம்சம் (கி.பி.6). மகாவம்ச நூலாசிரியர் அதன் முன்னோடி நூல்பற்றிப் பின்வருமாறு “புத்தர் வருகை” என்ற முதல் இயலின் தொடக்கத்தில் கூறுகின்றார்.

“.... எவ்விதத்திலும் குறையில்லாததும் எல்லாம் நிறைந்ததுமான மகாவம்சத்ததைக் கூறத் தொடங்குகின்றேன்.

புராதன முனிவர்களால் தொகுக்கப்பெற்ற அது (மகாவம்சம்) இங்கே விரிவாக கூறப்பட்டுள்ளது. பழையநூல் சுருக்கமானது.பல இடங்களில் ஒரே விஷயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டுள்ளது.

இப்போது சொல்வது அத்தகைய குறைகள் இல்லாதது.

- ப.9.

மகாவம்சம் முதல் ஐந்து இயல்களிலும் புத்திரின் மூன்று வருகை பற்றியும் பௌத்தமதம் பற்றியுமே கூறுகின்றது. ஆறாவது இயல் “விஜயன் வருகை” என அமைந்துள்ளது. தொடர்ந்து அரசர்கள் வரலாறும் பௌத்தசமய வளர்ச்சியும் கூறப்படுகின்றன. இந்நூலின் காவிய நாயகர் துட்டகைமுனு (துட்டகா மணி). விஜயன் முதல் மகாசேனன் வரை (கி.மு.543 – கி.பி. 302) பதினான்கு அரசர் வரலாறு கூறுகின்றது. முதலாவது இயலில் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் யார்கள், நாகர்கள் என்று கூறப்படுகின்றனர். விஜயன் இயக்கர் மரபைச் சேர்ந்த இளவரசி குவன்னா (குவேனி ) என்பவளை மணந்து அரசனானான். பின் தமிழகப் பாண்டிய மன்னனுடைய மகளை மணந்தான். குவேனி கொல்லப்பட்டாள். புத்தர் நாகதீபம் வந்து பௌத்தக் கோட்பாட்டைப் பரப்பியதும் கூறப்படுகின்றது. நாகதீபம் இலங்கையின் வடமேற்குப் பகுதி என்றும் யாழ்ப்பாணம் என்றும் வரலாற்று அறிஞர்களால் விளக்கப்படுகின்றது. மகாவம்சத்தின் காவிய நாயகர் துட்டகைமுனு (கி.மு. 164 – 140) ஈழத்துத் தமிழ் அரசனான எல்லாளனை (கி.மு.204 – 164)வென்ற செய்தி முதல் இயலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

“துட்டகாமணி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது இந்த இடத்திற் தங்கியிருக்க நேரிட்டது.”

அசோகன் காலத்தில் ஈழத்தைத் தேவநம்பியதீசன் (கி.மு. 307 – 266) ஆண்டான். புத்தர் காலத்தில் புத்தர் மூலமே பௌத்தம் ஈழத்திற்கு வந்தது என்று கூறப்பபட்டபோதிலும் அசோகன் காலத்திலேயே பௌத்தம் இலங்கைக்கு வந்தது என்பது வரலாற்று அறிஞர் கருத்தாகும். இக்காலத்தில் வடஇந்தியாவிலும் தென்னிந்தியத் தமிழகத்திலும் தென்னிலங்கையிலும் நாகதீபத்திலும் பௌத்தம் பரவியது. இக்காலத்தில் பாளி மொழிமூலம் பௌத்தம் பரவியது. தீபவம்சம்,மாகாவம்சம், சூளவம்சம் ஆகிய பௌத்த நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்டன. எனினும் தமிழகத்திலும் தமிழீழத்திலும் தமிழ் மூலமே பௌத்தம் பரவியது. மணிமேகலை நூல் இதற்குச் சான்றாகும்.

ஈழத்தில் இன்று தமிழ்,சிங்களம் என்ற இருமொழிகள் வழக்கில் உள்ளன. எனினும் கி.மு.1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ் மொழியும் திராவிட மொழியும் இருந்தன. இதனைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் பின்வருமாறு விளக்குகின்றார்.

“....தமிழ்க் குடியேற்றத்தின் பழைமை..... தற்போதைய ஆய்வுகள், அதுவும் பன்முகப் பார்வையில் கிடைத்துள்ளன சான்றுகள் இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக் முன்னரே, சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ்மொழி பேசுவோரும் தற்காலச் சிங்களமொழி பேசுவோரின் மூதாதை மொழியாகிய தமிழின் கிளைமொழியாகிய எலு மொழி பேசுவோரும் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன. இன்னொரு கோணத்தில் நோக்கும்போது தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 3ம் ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் செந்தமிழும் கொடுத்தமிழும் காணப்பட்டதுபோன்றே ஈழத்திலும் தமிழ் (செந்தமிழ்),எலு (கொடுந்தமிழ்) ஆகிய மொழிகள் காணப்பட்டன. எனலாம்.

பண்டைய ஈழத்தில் தமிழர் - ஒரு பார்வை, யாழ்பல்கலைக்கழகம். 200.ப.50.

தொல்காப்பியர் ஈழத்துத் தமிழறிஞர் என்ற கருத்து உள்ளது என்பதும் இங்கு கருதத்தக்கது.

ஈழத்து ஆதிக்குடிகள் பற்றிய கருத்துக்கள் வரலாற்று நெறியில் அண்மையிலேயே சரியாகக் கூறப்படுகின்றன. எனினும் மேலே கூறப்பட்ட பாளி நூல்கள் ஆரியக் குடியேற்றத்தை விஜயன் கதைமூலம் ஐதீகமாக உருவகப்படுத்தியுள்ளன. நவீன சிங்கள வரலாற்றாசிரியர்கள் சிலர் விஜயன் கதையை ஏற்காது ‘இது தொடர்ந்து நிகழ்ந்த ஆரியர் குடியேற்றத்தைக் கற்பனை முறையில் கூறுவது” என நிராகரிப்பர். சிங்களம் ஆரியமொழி என்ற கருத்தை நிரூபிப்பதே இதன் நோக்கம். ஆனால் சிங்களம் திராவிடமொழி என்பதே பன்மொழி ஆய்வாளர் கருத்தாகும். மொழியில் அறிஞரான முனைவர் கு.அரசேந்திரன் “உண்மையில் சிங்களம் என்பது தமிழின் எழுபது விழுக்காட்டுச் சிதைந்த வடிவமே” என்பார். அவர் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சில சிங்களச் சொற்களை விளக்கியதோடு, “தமிழால் தழைத்த சிங்களம்” என்ற ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நூலில் இத்தொடர் ஆய்வை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

- (ப.81)

ஈழத்திலும் தமிழகத்திலும் பௌத்தமதம் பரவிய காலம் பெருங்காற் பண்பாட்டுக்காலம் என்று தொல்லியல் ஆய்வாளர்களால் ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது. இக்கால ஈழச் சாசனங்களையும் தொல்பொருள்களையும் ஆராய்ந்த வரலாற்றுத் தமிழ் அறிஞர்களான சி.க.சிற்றம்பலம், பொ.இரகுபதி,செல்லையா கிரு~ணராசா,பரமு பு~;பரட்ணம் முதலியோரும் எஸ். யூ.தெறணியகல முதலிய அறிஞர்களும் இவை தமிழ் சார்புடையவை என நிறுவியுள்ளனர் இக்கல்வெட்டுக்கள் பிராமிக் கல்வெட்டுக்கள் எனப்படுகின்றன. இவை பற்றிப் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் பின்வருமாறு விளக்குகின்றார்.

பௌத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் இவை சிங்கள மக்களின் ஆதிக்குடியேற்றத்திற்கான சான்றுகளாக மட்டுமன்றி, இவற்றிற் காணப்படும் பிராகிருத மொழி (ஒரு மதத்தின் மொழி) ஈழத்து மக்களின் மொழி எனவும் தவறாகக் கருதப்பட்டு வந்தது. இப்பிராமிக் கல்வெட்டுக்கள் பெருங்கற்கால மையங்களுக்குக் கிட்டக் காணப்படுவது மட்டுமன்றி இவற்றில் காணப்படும் குறியீடுகள், பெருங்கற்கால மக்களே பௌத்ததின் மொழியிலே பதியபட்டதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.”

பண்டைய ஈழத்தில் தமிழர்....2000.ப.47.

இச்சாசனங்களில் ஆரியப் பிரகிருத மொழியும் திராவிடப் பிராகிருத மொழியும் உள்ளன. இச்சாசன வரிவடிவங்கள் பின்வருமாறு பாகுபடுத்தப்பட்டுள்ளன.

1. பௌத்தத்துடன் வந்த வடஇந்திய வரிவடிவத்திற்கு முன்னர் வழக்கில் இருந்த வரிவடிவம். இது திராவிட வரிவடிவம் ஆகும். தமிழில் எழுதப் பயன்பட்டால் இது தமிழ்ப்பிராமி. இத்தகைய வரிவடிவமே தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் பௌத்தத்துடன் வந்த வடஇந்தியப் பிராமிவடிவத்துக்கு முன்னர் வழக்கிலிருந்தது.

2. பௌத்தத்துடன் ஈழம் வந்த வரிவடிவம். இதன் செல்வாக்கால் தமிழ்ப்பிராமி வழக்கொழிய (கி.பி.காலத்தில்) வடஇந்தியப் பிராமி வரிவடிவமே தென் ஈழத்தின் ஆதிப்பிராமி வரிவடிவாக வளர்ச்சி பெற்றது.

இவற்றின் அடிப்படையில் தமிழ், சிங்கள வேறுபாட்டிற்கு முந்திய நிலையை சி.க. சிற்றம்பலம் பின்வருமாறு முடிவுசெய்கிறார்.

“இப்பிராமி வரிவடிவத்தில் காணப்படும் குலஃ குழுப்பெயர்களான வேள், ஆய்,பதஃ பரத போன்றவையும் பருமக போன்ற பிற தமிழ்ப் பெயர்களும் தமிழை ஒத்த மொழி பேசியோரே இன்றைய தமிழ், சிங்கள மொழிகளின் மூதாதையினராக விளங்கினர். என்பதை உறுதி செய்கின்றன.”

தொன்மைத் தமிழில் வழங்கிய ஏழ் என்ற நாட்டுப்பெயரே பின் ஈழ, எல என மாறின என்ற கருத்து உள்ளது. ஈழ கல என மாறிப்பிள்ளை ஆகி, சிறீ என்ற சமஸ்கிருதச்சொல் சீ ஆகி சீகள ஆனது என்றும் இதுவே பின் சிகள, சிங்கள என மாறியதாகவும் கருதப்படுகிறது. இதேபோலவே இலங்கை லங்கா ஆகி பின் சமஸ்கிருத சிறீயுடன் சேர்ந்த சிறீலங்கா ஆனது என்றும் கருதப்படுகின்றது.

ஈழம் என்ற பெயர் தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இக் காலத்திலும் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவற்றுள் ஒன்று உணவு வணிகத் தொடர்பு. பட்டினப்பாலை என்ற சங்கத்தமிழ் நூலில்,‘ஈழத் துணவும் காளகத் தாக்கமும்’ என்ற வரி உள்ளது.

மேலும் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய சங்க நூல்களில் உள்ள ஏழு பாடல்களில் மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், ஈழத்துப் பூதன்தேவனார் என்ற சங்க புலவர் பெயர்களில் ஈழம் காணப்படுகின்றது. மேலே கூறப்பட்ட சான்றுகளின் அடிப்படையில்,ஈழம், குமரிக்கண்டம் என்ற குமரி நாடுகளில் ஒன்றாக இருந்தது. என்பதும் தமிழ் நிலமாக இருந்தது என்பதும் பின் கடல்கோளால் ஈழம் என்ற பெரிய தீவாகி, பின் சிறிய தீவானது என்பதும் உறுதியாகின்றது. அதனோடு இன்றைய தென்னிலங்கைச் சிங்களம் ஆரியமொழியன்று என்பதும் அது பாளிமூலம் தொடர்புகொண்ட முப்பது வீதம் ஆரியமும் நிலையான மொழியான எழுபதும் வீதத் தமிழ் கொண்ட, திராவிட மொழி என்பதும் உறுதியாகின்றது. எனவே, ஈழம் “திராவிட” நாடு என்பதும் உறுதியாகும்.

ஈழம் தமிழகமாகத் தொடர்ந்து இருந்ததனால் இங்கு தமிழ்க் கல்வி உயர்ந்த நிலையில் இருந்து பல புலவர்களும் பல நூல்களும் தோன்றியிருக்கும் என்பது உறுதி. ஆனால் இந்நூல்கள் எதுவும் இன்று எமக்குக் கிடைக்க வில்லை. தமிழகத்திலும் சங்ககாலத்தில் மிக அதிகநூல்கள் தோன்றியிருக்க முடியும் எனினும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பதினெட்டு நூல்கள் மட்டுமே கிடைத்தன. ஈழத்து அறிஞர்களான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை ஆகியோரே இவை அச்சுவடிவு பெற்றுத்தப்ப மூலகாரணமாய் இருந்தனர். ஆனால்,ஈழத்தில் தோன்றிய பழைய தமிழ் இலக்கியங்கள் தோன்றி அழிந்தன. என்பதே பொருந்தமாகும். இது பற்றிக் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

“தமிழ்நாட்டிற் சங்க இலக்கியங்கள் தோன்றிய காலகட்டத்திலே ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களும் இலக்கியங்களை ஆற்றியிருப்பார்கள். இப்புலவர்களின் ஆக்கங்கள் தொகுப்புபோர். தொகுப்பிப்போர் இன்றி நாளடைவில் அழிந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலமாகத்தாம் வாழ்ந்த சூழலிலே தம் பண்பாட்டுப் பின்னணியில் இலக்கியம் படைக்காத ஒரு சமூகத்தினைக் காண்பது அரிது. தமிழக உறவுகளும் தொடர்புகளும் மிக்கிருந்த நிலையிலே சிறபப்பானதோர் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் ஈழத்தில் நிலவியிருக்கும் என்று கருதுவது தவறாகாது.”

ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, திருநெல்வேலி தனலக்குமி புத்தகசாலை,2001.பக்.5-6

இதனை உறுதி செய்வதுதான் மேலே குறிப்பிடப்பட்ட ஈழத்துப் பூதன்தேவனாரின் சங்க இலக்கியக் கவிதைகள். எனினும் சிலர் இதனை ஏற்பதில்லை. அவருடைய பாடல்களில் ‘ஈழம்’ என்ற சொல் இல்லை என்பதே இவர்களுடைய கருத்துக்குக் காரணம். மேலே கூறப்பட்ட பேராசிரியர் மது.ச.விமலானந்தன் “ஈழம் என்பத இலங்கையைத்தான் குறிக்கிறதா? இவர் பாட்டினுள் ஈழம் பற்றிய குறிப்பும் இல்லை;. ஈழத் தமிழர் வரலாறு இவரிலிருந்தே தொடங்குகின்றது. தலைச்சங்க முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழநாட்டவர். நாகர் குடியினர். தொல்காப்பியரின் பிறப்பகம்கூட ஈழத்தில் உள்ளது எனறொரு ஆய்வும் உள்ளது. தமிழுணர்ச்சி குன்றிய காலத்தில் தமிழுக்கு அரும் பணியாற்றி, இலங்கைப் பழம்பெருமை வெளிகாட்டிய சிறப்பினர்.”

- மேலுது ப.1862 – 1863

தமக்கு ஏற்படும் ஐயத்தை அவர்களே மறுப்பதை இப்பகுதியிலேயே காணலாம். ஈழம் இலங்கையைத்தான் குறிக்கின்றது என்பது மேலே குறிப்பிட்ட சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. நாகதீவே நயினாதீவு என்ற கருத்தும், நாகதீவே யாழ்ப்பாணம் என்ற கருத்தும் உள்ளது. எனினும் முழு இலங்கையுமே நாகதீவு (நாகநாடு) எனப்பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமுளது. இது விரிவாக ஆராயப்படவேண்டும். குமரிநாடே நாகநாடு என்றபெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கும் ‘நாக’ என்ற பெயர் சான்றாகக்கூடும். “ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற பெருநூலைப் பேராசிரியர் ஆ.சதாசிவம் ஈழத்துப் பூதன்தேவனர் பாடல்களுடன் தொடங்குகின்றார். எனினும், முரஞ்சியூர் முடி நாகனாரை ஈழத்தவராக ஏற்று சங்ககாலப் பகுதியில் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. “வேறும் ஈழத்துப் புலவர் சங்கத்திலமர்ந்திருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.
(சாகித்திய மண்டலம், கொழும்பு, 1966,ப.1.)

சங்க கால இலக்கியங்களில் பூதன்தேவனார் என்ற பெயருடன் மூவர் இடம்பெற்றுள்ளனர் அவை வருமாறு.

1 மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்;
-நற்றிணை 366. அகநானூறு 231.307
குறுந்தொகை 189, 360

2 ஈழத்துப் பூதன்தேவனர்
- அகநானூறு 88, குறுந்தொகை 343.

3 பூதன்தேவனார்.
-நற்றிணை 80.

தமிழகத்திற் பூதன்தேவனார் என்று ஒரு புலவர் இருந்ததால் தமழீழத்தில் இருந்து சென்ற கவிஞரை அவரிலிருந்து வேறுபடுத்த ஈழத்துப்பூதன்தேவனார் என அவருக்கு அடைமொழி வழங்கப்பட்ட்டது என்பது அறிஞர்கள் கருத்து. ஈழத்துப்பூதன்தேவனார் எனப்பட்டார் என்பதும் அறிஞர் கருத்தாகும். எனினும் மூன்று பெயர்களையும் ஒப்பிட்டும்போது மூவரும் ஒருவர் என்று கருதுவதே பொருத்தமானது என்று தோன்றுகின்றது. இருவரும் ஒருவர் என்பதற்கு ஈழம் சான்றாக அமைந்தால் மூன்றாமவரை அவரிலிருந்து வேறுபடுத்த அவருக்கும் பெயர் முன் இடப்பெயர் சூட்டப்பட்டிருக்கவேண்டும். சாத்தனார் என்று சங்க இலக்கியத்தில் இரு புலவர்கள் உள்ளனர். ஒருவர் பேரி சாத்தனார். எனப்படுகிறார். மற்றவர் சீத்தலைச் சாத்தனார் எனப்படுகின்றார். இதுவே, சங்ககால மரபானால் தமிழகத்தவர் என்று கருதப்படும் புலவருக்கும் அடைமொழிப்பெயர் ஒன்று சூட்ட்டப்பட்டிருக்கும். என்பது உறுதி. மூவரும் பெயர்களும் வழக்கில் இருந்தன என்பதே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது இது மேலும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டும்.

ஈழத்துப் பூதன்வேனார் முதல் இன்றைய புதிய கவிஞர்கள்வரை, சங்ககாலம் முதல் இன்றுவரை இடையீடற்ற இலக்கிய வளர்ச்சி ஈழத்தில் தொடர்ந்தது என்பது மேலே கூறப்பட்ட கருத்துக்கள் மூலம் உறுதிபெறுகின்றன.

ஈழத்தில் நிலையாக வாழ்ந்த தமிழர் எவரும் இருக்கவில்லை என்றும் சிங்கள அரசுகள்மீது படையெடுக்க வந்த சோழ, பாண்டியர் படைகளுடனேயே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என்றும் பிற்காலத்தில் ஏற்பட்ட இத்தமிழர்களுடனான நெருங்கி வாழ்ந்த தொடர்பே சிங்களத்தில் தமிழ்ச் சொற்கள் சேரக்காரணமானது என்ற கருத்தும் முழு இலங்கையிலும் சிங்களவரே வாழ்ந்தனர் என்ற கருத்தும் சில (சிங்கள) அறிஞர்களிடம் உள்ளது. மேலே கூறப்பட்ட தொல்லியல் ஆய்வு அடிப்படையில் நோக்கும்போது இக்கருத்து தவறானது என்பது தெளிவாகும்.

எனவே உலகளாவிய தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் தனித்தும் இணைந்தும் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் ஈழம் தொன்மையான தமிழகம் என்பதையும் சிங்களம் ஒரு திராவிடமொழி என்பதையும் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்கின்றன. எனவே, ஈழத்தில் வாழும் தமிழர்கள் தொன்மையானவர்கள் என்பதில் ஐயமில்லை.

இவ்வாக்கம் ஈழத்தமிழர்களின் தொன்மைப் பற்றிய பல வலைப்பதிவர்களின் கேள்விக்கு பதிலாக மீள்பதிவிடப் பட்டுள்ளது.

நன்றி: எரிமலை: http://www.erimalai.info/2005/may/articles/eelathamilar_thonmai.htm
ஆக்கம்: மயிலங்கூடல் பி.நடராசன்

Saturday, May 31, 2008

ஹொங்கொங் மொழி கட்டாயக்கல்வி

எந்த ஒரு மொழியினருக்கும் அவர் தம் மொழிப்பற்றும் வளர்ப்பும் தலையாய பணியாகும். தமிழர்கள் செறிந்து வாழும் நாடான தமிழ் நாட்டில் தமிழ் மொழியை கட்டாயக் கல்வியாக்குவது தொடர்பில் விவாதம் நடைப்பெற்று வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் ஹொங்கொங் பாடசாலைகளில் கண்டோனீஸ் மொழி (சீனம்) முதலாம் ஆண்டிலிருந்தே கட்டாயப் பாடமாக்கப்பட்டு வருகின்றது.

இங்கே ஹொங்கொங் சீனர்களைத் தவிர அமெரிக்கர், இங்கிலாந்தினர், அவுசுதிரேலியர், கனேடியர், யப்பானியர், பிலிப்பினியர், இந்தோனேசியர், இந்தியர், பாக்கிஸ்த்தானியர், நேபாளவர், தாய்லாந்தினர் என இன்னும் பல்வேறு மொழியினரும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லோரும் பொதுவாகவே ஆங்கில வழியிலேயே தமது கல்வியை கற்கின்றனர். சீன மொழி ஒரு விருப்பு பாடமாகவே இருந்து வந்தது.

2007 ம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் நாளில் இருந்து சீனம் அல்லாத வேற்று மொழிப் பாடசாலைகளானாலும் சீனமொழிப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஹொங்கொங் நாட்டின் நிதியுதவியுடன் நடாத்தப்படும் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் சீன மொழி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் எனும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. "டொக்டர் அர்தர் லீ" (Dr. Athur Lee) என்பவரே இவ்வதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதுவரை வேற்று மொழியினரான பலர், சீன மொழியை கற்காமல் இருந்தனர். தற்போது எல்லோரும் கற்க வேண்டியக் கட்டாயத்திற்கு உற்பட்டுள்ளனர். அதுவும் முதலாம் வகுப்பிலிருந்தே.

எந்த நாட்டவரானாலும், என்ன மொழிப் பேசுவோரானாலும் இந்த நாட்டில் கல்வி கற்போர் இந்நாட்டு மொழியான (கண்டோனீஸ்) மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்பது இந்நாட்டின் சட்டமாகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் அவரவர் நாடுகளில் தத்தம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வேலையில், தமிழர் தாயகமான தமிம்நாட்டிலோ தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டுமா? வேண்டாமா? என விவாதித்து வருகின்றனர். இதனை என்னவென்று கூறுவது?

அதேவேளை ஹொங்கொங்கில் தமிழ் ஆர்வளர்களால் நடாத்தப்படும் "தமிழ் மொழி" வகுப்புகள் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஆண்டு விழாவும் எடுத்தனர். இது போன்ற செயல்பாடுகள் எத்தனைப் பாராட்டுக்குறியது!

பெயரளவில் மட்டுமே "நாடு" எனும் அடைமொழியைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைப் போன்று அல்லாமல், தமிழருக்கு என ஒரு நாடு இருந்தால் இதுப் போன்ற விவாதங்களிற்கு ஒருப்போதும் இடமிருக்காது.

எம்மொழி செம்மொழி "கவிமாலை"

இன்று 2008 மே 30-ஆம் நாள் ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் ஒழுங்குச் செய்யப்பட்ட "கவிமாலை" நிகழ்வு இந்தியா கிளப், கிங்ஸ் பார்க், கவ்லூனில் இடம்பெறுகின்றது. அந்நிய சூழலில் நடாத்தப்படும் இதுப்போன்ற தமிழ்மொழி தொடர்பான நிகழ்வுகள் மனதிற்கு எத்தனை நிறைவைத் தருகின்றன!

Saturday, May 17, 2008

தூயத் தமிழ் சொற்கள்

எமது தமிழர் பேச்சு வழக்கில் பயன்படும் கிரந்தச் சொற்களுக்கு இணையான தூயத் தமிழ் சொற்கள்.

பாஷை - மொழி
அக்கிரமம் - முறைகேடு, ஒழுங்கின்மை
அக்கினி - நெருப்பு, தீ, அனல், தழல்
அகங்காரம் - செருக்கு, தற்பெருமை
அகதி - ஏதிலி

அகந்தை - செருக்கு, இறுமாப்பு
அகராதி - அகரமுதலி, அகரவரிசை
அகாலம் - தகாக்காலம், அல்காலம், இயற்கையல்லாத
அகிம்சை - துன்புறுத்தாமை, இன்னாசெய்யாமை
அகில - அனைத்து, முழு

அகிலம் - உலகம், வையகம்
அகோரம் - கொடுமை
அங்கம் - உறுப்பு, பகுதி
அங்குலம் - விரற்கிடை, இறை, விரலிறை
அசம்பாவிதம் - முரணிகழ்வு

அசரீதி - விண்ணொலி
அசாத்தியம் - இயலாமை, இயலாதது
அஞ்சலி - வணக்கம்
அஞ்ஞானம் - அறியாமை, அறிவின்மை
அஞ்ஞானி - அறிவிலி

அத்தம்/அஸ்தம் - கை
அத்தமனம்/அஸ்தமனம் - மறைவு
அத்தி/அஸ்தி - என்பு, எலும்பு
அத்தியாயம் - இயல், நூற்பிரிவு
அத்திரம் - கணை, அம்பு

அதம் - அழிப்பு
அதமம் - அழிப்பு
அதரம் - இதழ்
அதிகம் - மிகுந்த, மிக்கவை, பெருக்கம், மிகுதி, நிறைய, நிறைவாக
அதிகாரம் - இயல், ஆட்சி, ஆளுமை, ஆட்சியுரிமை, செயலுரிமை

அதிகாரி - மேலாளர்
அதிகாலை - விடியல், வைகறை
அதிசயம் - வியப்பு
அதிட்டம்/அதிஸ்டம் - நல்வாய்ப்பு, நல்லூழ், ஆகூழ்
அதிதி - விருந்தினர்

அதிபதி - முதல்வன், தலைவன்
அதிர்ஷ்டம் - கொடுப்பினை, நல்லூழ்
அதிஸ்டம் - நல்வாய்ப்பு, நல்லூழ், ஆகூழ்
அதீதம் - மிகை
அந்தரங்கம் - மறைவடக்கம்

அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை
அபாயம் - பேரிடர்
ஆச்சரியம் - வியப்பு

ஆதாரம் - சான்று, பற்றுக்கோடு, நிலைக்களன், அடிப்படை
ஆபரணம் - அணிகலன்
ஆயுதம் - கருவி
இலகு – எளிது, எளிமை
உச்சரித்தல் - பழுக்குதல்

உபதேசம் - நல்லுரை
உபயோகம் - பயன்
ஏலம் - கூறுகை, கூறல்
ஐக்கியம் - ஒற்றுமை, ஒருமைப்படல்
ஒளடதம் - மருத்து

கங்கணம் - உறுதி (பூணல்)
கட்சி – அணி
கப்பம் - வன்பறி
கஸ்டம் - துன்பம், கடுமை
கேலி – பகிடி, ஏகடியம், எள்ளல்

சந்தோசம் - மகிழ்ச்சி
துரோகம் - இரண்டகம்
தூசணம் - இழிமொழி, வசை
தேகம் - உடல்
தொப்பி – கவிப்பு

நகல் - படி
நிமிசம் - மணித்துளி
பாரம்பரியம் - வழிவழியாக, தலைமுறை, பழம்பெருமை
பாஷை - மொழி
பிரயத்தனம் - கடும் முயற்சி, முயற்சி

முக்கியம் - முதன்மை, முன்னுரிமை
முக்கியஸ்தர் - முன்னிலையாளர், முதன்மையாளர்
ரௌடி – முறையிலி, ஒழுங்கிலி
வித்யாசம் - வேறுபாடு, மாறுபட்ட
விரக்தி – மனமுறிவு, மனஉடைவு, மன இடிவு

வீதி – தெரு, மறுகு
வெகுமானம் - அன்பளிப்பு
வைத்தியம் - மருத்துவம்
வைத்தியசாலை - மருத்துவமணை

நன்றி: பதிவு

Friday, February 15, 2008

"மணம்" எனும் தமிழ் சொல்

"மணம்" என்னும் தமிழ் சொல் எதை குறிக்கின்றது? என் நண்பருடன் எழுந்த “மணம்” எனும் தமிழ் சொல் தொடர்பாக எழுந்த தமிழ் மொழியாய்வு விவாதம்.

நானும் என் நண்பர் ஒருவரும் உணவகம் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றோம். சாப்பாட்டைப் பார்த்ததுமே நண்பர் மணமாக இருக்கின்றது என்றார். அதாவது வாசனையாக இருக்கின்றது எனும் பொருளில்.

எனக்கு அது வாசனையாக தெரியவில்லை. நான் "மணம்" என்றால் என்ன என்றேன், இது தான் விவாதம்.

"மனம்" என்று மனதை குறிக்கும் சொல் ஒன்றும் உள்ளது அது வேறு.
நான் கூறுவது மணம்.

எடுத்துக்காட்டாக; திருமணத்தையும் "மணம்" என்று சுருக்கிக் கூறும் வழக்கும் சிலரிடம் காணப்படுகின்றது.

அப்படியானால் தமிழ்மணம்.

தமிழ் – திருமணமா? நிச்சயமாக அப்படியில்லை.

மணம் என்றால் வாசனை பரவச்செய்யும், மண விருப்பத்திற்கு ஒன்றானதாக குறிப்பிடுகின்றோம். அதாவது வாசனை.

மணம் – வாசனை என்றால், தமிழ்மணம் – தமிழ்வாசனை என்று பொருள் தருகின்றது என்று வைத்துக்கொள்ளலாம். (தமிழ் மொழியின் வாசனை)

தமிழ் வலைப்பதிவுலகின் முன்னனித் திரட்டியான "தமிழ்மணம்" எனும் திரட்டி வலைப்பதிவர்களின் ஆர்வத்தையூட்டி அவர்களது ஆக்கங்களை உலகெங்கும் நறுமணம் பரவச்செய்கின்றது. நான் அந்த தமிழ்மணம் பற்றி பேசவில்லை.

"மணம்" எனும் தமிழ் சொல் பற்றியே பேசுகின்றேன்.

அவ்வாறு “மணம்” வாசனையென்றால், நறுமணம் எனும் சொல் எதைக்குறிக்கின்றது?

நறுமணம் நல்ல மணம் என்றால், துர்மணம் கூடாத, விரும்பத்தகாத மணம் அப்படியல்லாவா?

அப்படியானால் மணம்?

நண்பர் கடைசி மட்டும் எனது கருத்திற்கு உடன் படவில்லை.

எனது கருத்து இதுதான்.

என்னைப்பொருத்த மட்டில் மணம் எனும் சொல், நறுமணத்தையோ, துர்மணத்தையோ குறிப்பது அல்ல. மாறாக மணத்தை நுகர்ந்து அது நறுமணமா, துர்மணமா என்பதை வெளிப்படுத்த உபயோகிக்கப்படும் ஒரு பொதுவான நுகர்வை குறிக்கும் சொல்.

சரி இது தொடர்பான உங்கள் கருத்தையும் கூறுங்கோவன்.

Monday, February 11, 2008

தமிழ் மொழி சிறப்புகள்

உலக மொழிகளில் 6800 க்கும் அதிகமான மொழிகள் 200 நாடுகளில் பேசப்படுகின்றன. அவற்றில் 2261 மொழிகள் மட்டுமே எழுத்துருவும் பேச்சொலியும் கொண்ட மொழிகளாக உள்ளன. அவற்றில் தனித்துவமான எழுத்துருக்களை கொண்ட மொழிகள் ஒரு சில மட்டுமே ஆகும்.

எடுத்துக்காட்டாக; பிலிப்பின், இந்தோனேசியன் போன்ற மொழியினர் தமது மொழியை ஆங்கில எழுத்துருக்கள் கொண்டே எழுதும் வழக்கை கொண்டுள்ளனர். தவிர அம்மொழிகளுக்கு என தனித்துவமான எழுத்துருக்கள் எதுவும் இல்லை. ஐரோப்பிய மொழிகளில் அதிகமானவை உரோம எழுத்துருக்களை தழுவி உருவானவைகளே ஆகும்.

உலக மொழிகளைப்பற்றி மேலும் தகவல்களை அறிந்துக்கொள்ள இங்கே அழுத்துங்கள். அகர வரிசையில் உலக மொழிகளை பட்டியலிட்டுள்ளனர்.

கீழே உள்ள இணையத்தளத்திலும் பார்க்கலாம்.

http://www.nvtc.gov/lotw/languageListFamily.html

உலக மொழிகள் தொடர்பான பல தகவல்களை கீழுள்ள தளத்தில் தொகுத்து வைத்துள்ளனர்.

http://www.worldlanguage.com/Languages/

திராவிட மொழி குடும்பம் பற்றிய தகவல்கள் இங்கே.

திராவிட மொழி குடும்பத்தில் தமிழ் மொழியே மூத்த மொழியாகும்.

உலகில் அதிகமாக பேசப்படும் 30 மொழிகளை பட்டியலிட்டதில் தமிழ் 17 வது இடத்தில் இருக்கின்றது.

ஆங்கில விக்கிபீடியா பட்டியலிலும் பார்க்கலாம்.

உலகில் செம்மொழிகளின் பட்டியலும் அதன் விபரங்களும்.

செம்மொழிக்கான தகுதிப்பாடுகள் என்னென்ன? தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கான தகுதி எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது (Statement on the Status of Tamil as a Classical Language) பாருங்கள்.

இந்து இணையத்தளத்தில் S. S. வாசன் என்பவர் எழுதியுள்ள கட்டுரை.

தமிழ்நெட் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

'Thamizh' (Tamil) is the real ancient and original language spoken by people of India. "குருநாத்" என்பவரின் ஆக்கம்.

செம்மொழிக்கான 11 தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாக உள்ளன, என்று ஆர். சண்முகலிங்கம் கூறுகின்றார். இதை வாசித்தறிவதற்கு இங்கே சொடுக்குங்கள்.

தமிழில் வாசித்து அறிய விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

Tuesday, January 22, 2008

மனிதம் (கவிதை)

உலகில்.............!
இன,மொழி, சாதி, மத, பேதங்களிற்கப்பால்
மனிதம் இருக்கிறது.

இனவெறிக்கொண்ட ...!
இலங்கை திரு நாட்டில்
கட்டவிழ்த்து விடப்பட்ட - தமிழின
அழிப்பாலும், சுத்திகரிப்பாலும். ..

பாதிக்கப்பட்ட...!
பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்.
இனவெறியர்களையும்,
இழிமத மனநோயாளர்களையும் - கண்டே கொதித்தவேளை

என்னுள்ளும் புகுந்தது
எங்கிருந்தோ இனவெறி
காலங்கள் கற்றுத்தந்த
பாடங்களாய்.................!

மதம் பாராது, இனம் பாராது
மனிதாபிமானத்துடன் செயலாற்றும்
மாமனிதர்களின் செயற்பாடுகள் - என்
மனக் கசடறுத்தது.

மனித நேயத்துடன் தொண்டாற்றும்
மகத்தான அமைப்புகளினதும் - எண்ணற்ற
தொண்டு நிறுவனங்களினதும் செயல்பாடுகள்...!
உரத்துச் சொல்லியது ஓர் உண்மையை - அது
உயர்ந்தது மனிதம் தான் என்று.

ஆம்............!
உலகில் இன, மொழி, சாதி, மத,பேதங்களிற்கப்பால்
மனிதம் இருக்கின்றது.

Sunday, January 6, 2008

எம்மொழி செம்மொழி

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின், பல பண்பாடுகளின், பல திணை நிலங்களின் சங்கமம்.

திராவிட மொழிகளுக்கென்று குடும்பம் உண்டு. ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளின் மூல மொழிகளுடைய எண்ணிக்கையை ஆய்ந்தால் சில நூறு மொழிகள் பட்டியலிடப்படலாம். அது போன்ற பட்டியலில் இரு பிரிவுகள் காணப்படும்.

1.இயற்கை மொழி மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி.

2.செயற்கை மொழி ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி.

இவ்வாறு தான் இன்று நூற்றுக்கணக்கான (மூல மொழிகளிலிருந்து) இயற்கை மொழிகளிலிருந்து கிளைத்து செயற்கை மொழித் தகுதியுடன் இருப்பவை பல்லாயிரம் மொழிகளாகும். திராவிட இயற்கை மொழிக் குடும்பமும் அவற்றில் ஒன்று. உலகின் தொன்மையான மொழிக் குடும்பம் என்ற பெருமையும் இவற்றிற்கு உண்டு.

திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக இருப்பது தமிழ் மொழி.

திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 22. இதில் இலக்கியத் திறனுள்ள மொழிகள் இலக்கியத்திறன் இல்லா மொழிகள் என இருபிரிவுகள் உள்ளன. பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் தொடங்கி மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி திராவிட இன மக்கள், தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம், கேரள எல்லைகள் மற்றும் மலைகளின் மீது வாழும் பழங்குடி இன திராவிடர்கள். தெற்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜீ தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கை (ஈழம்) எனப் பல்வேறு பகுதிகளில் திராவிட இன மொழிக் குடும்ப மக்கள் வாழ்கின்றனர்.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பவை இலக்கியத் திறன் பெற்றவை. இலக்கியத் திறன் இன்றி பேச்சு வழக்கில் பயன்பாட்டிலுள்ள திராவிடக் கிளை மொழிகள் கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி, முதலான மொழிகள் பலவும் வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது. தமிழகம், கன்னட நாடு, தெலுங்கு நாடு மற்றும் மலையாள நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் வாழ்ந்து வரும் பழங்குடி திராவிடர்கள் தோட, கோத், படக, கேடகு, துளு முதலான தமிழின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். இவற்றில் துளு மொழிக்கு தற்போது வரிவடிவமும் இலக்கியங்கள் படைப்பாக்கமும் தொடங்கியுள்ளது.

இவ்வாறு திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழியான தமிழ் தோன்றி நின்று நிலைபெற்று செழிந்திருப்பதால் செம்மொழி எனும் தகுதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே சீனம், ஹீப்ரு, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை இத் தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவில் செம்மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது.உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்றன.

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.

செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது. இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்."நாராய் நாராய் செங்கால் நாராய்பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னபவளக் கூர்வாய் செங்கால் நாராய்நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடிவட திசைக்கு ஏகு வீராயின்எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கிநனைசுவர்க் கூறைகளை குரற் பல்லிபாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டுஎங்கோன் மாறன் வழுதி கூடலில்ஆடையின்றி வாடையின் மெலிந்துகையது கொண்டு மெய்யது பொத்திக்காலது கொண்டு மேலே தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனும் எனுமே" என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

நன்றி: கணியத்தமிழ்

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புவோர் கீழே சொடுக்கி வாசிக்கலாம்.

http://www.tamilnation.org/literature/shanmugalingam.htm

Friday, January 4, 2008

அப்துல் கலாம் பேட்டி 2008

அப்துல் கலாம் அவர்கள் தனது ஆரம்ப பாடசாலை அனுபவங்கள் முதல் தனது வாழ்க்கையின் படிப்படியான முன்னேற்றங்கள் வரை மனம் திறந்து கூறுகின்றார்.