முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Monday, March 1, 2010

ஹொங்கொங் இலக்கிய வட்டம்

ஹொங்கொங் வாழ் தமிழ் மொழி ஆர்வலர்கள் சிலரது முயற்சியால், ஹொங்கொங் இலக்கிய வட்டம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வட்டத்தில் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளல், மற்றும் பிறமொழி இலக்கியங்கள், வாழ்வனுபவங்கள், நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள், பழந்தமிழ் படைப்புகள், திரைப்படம், நாடகம், இசை, இணையம், இதழியல், நிழற்படம், ஓவியம், நாட்டியம், புலம் பெயர் வாழ்க்கை என பலவற்றையும் ஆய்வுசெய்யும் ஒரு குழுவாக இது இயங்கிவருகின்றது.

கிட்டத்தட்ட 80 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு யாஹூ குழுமம் ஒன்றையும் இவர்கள் நடாத்தி வருவதை அறிய முடிகின்றது.

இலக்கிய வெள்ளி
--------------------------------------------------------------------------
இந்த ஹொங்கொங் இலக்கிய வட்டத்தினர் 2008 ஜுலை 13 ஆம் நாள், தமது 25 ஆவது இலக்கிய வட்டக் கூட்டத்தினை நடாத்தினர். அக்கூட்டத்தின் போது "இலக்கிய வெள்ளி" என்னும் நூலையும் வெளியிட்டனர். இது இக்கூட்டத்திற்கு முன்பு வரை நடைப்பெற்ற 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாகும். நூலின் முதல் பிரதியை, ஹொங்கொங் தமிழ்ச் சமூகத்தின் மூத்த பிரமுகர் என எல்லோரதும் மதிப்புக்கும் மரியாதைக்கு உரியவரான திரு. செல்வகணி முஹம்மது யூனூஸ் வெளியிட, தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. அ. செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.

இந்நூலின் தொகுப்பாசிரியரும் இலக்கியவட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு.மு இராமனாதன் நிழல்படத்தின் இடது பக்கம் நிற்கிறார்.

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்
--------------------------------------------------------------------------
அத்துடன் அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஆறு தமிழறிஞர்களைப் பற்றிய அருமையான பதிவுகளையும் ஹொங்கொங் இலக்கியவட்டம் பதிவுசெய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு.வி. கலியாணசுந்தரனார்( 1883 - 1953) [திரு.வி.க]

வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936) [வ. உ.சி]

தேவநேயப் பாவாணர் (1902 - 1982)

வை மு கோதைநாயகி அம்மாள்( 1901-1960)

சி. சு.செல்லப்பா (1912-1998)

ஆ.இரா. வேங்கடாசலபதி(1967)

மேற்குறிப்பிட்ட அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் குறித்த பதிவுகளே அவைகளாகும்.

ஹொங்கொங் இலக்கிய வட்டத்தினரால் நடாத்தப்படும் இதுப்போன்ற, தமிழ் மொழி சார்ந்த முன்னெடுப்புக்கள் உண்மையில் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவே இருக்கின்றது. இன்று உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழர்கள் மத்தியில் தாய் மொழி மறந்து, தமிழ் மொழி சிதைந்து வரும் நிலையில் இதுப்போன்ற நிகழ்வுகள் பாராட்டுக் குறியவைகளாகும்.

வெளியிணைப்பு
--------------------------------------------------------------------------
மேலும் தகவல்களுக்கு "ஹொங்கொங் இலக்கிய வட்டம்" தளத்திற்கு செல்லுங்கள்.

http://www.ilakkyavattam.com/

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

No comments: