பைபிள் கூறும் நோவாவின் கதை
--------------------------------------------------------------------------
பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை" என்றழைக்கப்படுகின்றது. இந்த கப்பலை உருவாக்கிய நோவாவிடம்; நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் நிலைக்க ஒவ்வொரு விலங்கினத்தினத்தினதும், பறவையினத்தினதும், ஊர்வனவற்றினதும் ஒவ்வொரு சோடிகளை நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொள்ளும் படியும் கடவுள் கட்டளை இடுகிறார். அவ்வாறே நோவாவும் தானும் தனது குடும்பத்தாருடன், விலங்குகளுடனும் கப்பலுனுள் சென்று மூடிக்கொள்கின்றனர். மக்கள் நோவாவின் செயலை நகைக்கின்றனர். ஆனால் கடவுளின் கட்டளைப்படி நோவா கப்பலினுள் சென்றவுடன் பிரளயம் ஏற்படுகின்றது. 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, வெள்ளப்பெருக்கு, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அப்பிரளயத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் உயிரிணங்களும் அழிந்துப் போகின்றன. நோவாவின் கப்பல் மட்டும் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு சோடி சோடிகளாக வெளியேறுகின்றன.
அப்பேரழிவின் பின் கடவுள் நோவாவிடம் ஒரு உறுதிமொழி அளிக்கின்றார். அதாவது "இதன் பிறகு இதுப்போன்றதோர் பேரழிவை மீண்டும் ஏற்படுத்தமாட்டேன்" என கடவுள் நோவாவிடம் அளிக்கும் உறுதிமொழியே அது. அவ்வுறுதி மொழியினை நினைவு கூறும் விதமாக கடவுள் வானில் வானவில்லை தோன்றச் செய்கிறார். அதுவே முதன் முதலில் வானில் தோன்றிய வானவில். இன்றும் வானில் தோன்றும் வானவில் அவ்வுறுதி மொழியையே நினைவு கூறுகின்றது எனவும் பைபிள் கூறுகிறது.
பைபிளில் கூறப்படும் இக்கதையின் படி நோவாவின் கப்பல் அரராத் எனும் மலையில் தரைத்தட்டியதாக நம்பப்படுகின்றது. அரராத் மலை தற்போதைய துருக்கியில் இருப்பதாகவும், அங்கே நோவாவின் கப்பல் தரைத் தட்டியதாகக் பைபிள் கூறப்படும் இடங்களில் தேடுதல் நடைப்பெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன.
எப்படியோ பைபிள் கூறும்; நோவாவின் கப்பலை அரராத் மலையில் கண்டுப்பிடிக்கின்றனரோ இல்லையோ, ஹொங்கொங் வந்தால் நீங்களும் பார்க்கலாம்.
நோவாவின் பேழை (Noah's Ark)
--------------------------------------------------------------------------
வடிவமைக்கப்பட்டுருக்கும் நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் பிரளயத்தில் சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம் 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதாரக் கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. மேலும் பல்வேறு காட்சிகள் உள்ளன.

அதிலும் ஒரு சிறப்பான அனுகுமுறையை நோவாவின் பேழை பணியாளர்கள் கையாள்வதை காணக்கூடியதாக இருந்தது. உள்ளே வரும் பார்வையாளர்களை "நோவாவின் கப்பலுக்கு நல்வரவு, தயவுசெய்து உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுக்காதீர்கள்" என அறிவுறுத்தலையும் வரவேற்புரையுடன் வழங்குகின்றனர். உள்ளே எல்லா இடங்களிலும் கண்காணிப்பாளர்கள் கவனித்த வண்ணமே உள்ளனர். ஒவ்வொரு காட்சிகளையும் விவரித்து கூற ஆங்கிலம், கண்டோனீஸ் மொழி விவரிப்பாளர்கள் உள்ளனர்.
பண்டையச் சீனாவின் பழங்காலச் சின்னங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 10 இடங்களில், இந்த மா வான் தீவும் ஒன்று என்பதால், பல பண்டைய சீனச் சின்னங்களையும் உள்ளே பார்வையிடலாம். சந்திரனின் இறங்கிய எட்டாவது வின்வெளி வீரர், சந்திரனின் இறங்கும் போது உடுத்தியிருந்த உடை மற்றும் உபகரணங்கள் இங்கே காட்சிப்படுத்தியுள்ளன. இதைத் தவிர சிறுவர்களுக்கானப் பகுதி, உணவகப் பகுதி என்பனவும் உள்ளேயே உள்ளன. மூன்றாம் தளம் உல்லாசப் பயணிகளுக்கான தங்குமிடமாகும்.
குறிப்பாக கடல் மேல் கட்டப்பட்டிருக்கும் (Tsing Ma Bridge) சிங் மா பாலத்தின் அற்புதக்காட்சி, சுற்றியிருக்கும் தீவுகளின் காட்சி, இயற்கை சூழ்ந்த அமைவிடம், கடற்கரைக் காட்சி, பூங்கா உற்பட இத்தீவின் மாடிமனை குடியிருப்புத் தொகுதிகள் எல்லாம் கண்களைக் கொள்ளைக்கொள்கின்றன.

எனவே இத்தீவுக்கு பயணிப்பதானால் இரண்டு கடல் வழியில் பயணிக்கலாம். ஒன்று ஹொங்கொங் தீவில் சென்றலில் (Central) இருந்து கடல் வழியாகவும், மற்றது "ச்சுன் வான்" (Tseun Wan) எனும் பகுதியிலிருந்து கடல்வழியாகவும் பயணிக்கலாம். விமானத்தின் வசதிகளுக்கு இணையான சொகுசு, அதிவேக படகு சேவை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
கடல் வழி பயணத்தின் போது இருபுறமும் காணப்படும் தீவுகளும், கடல் மேல் கட்டப்படிருக்கும் மேம்பாலங்களும் பார்வைக்கு புத்தூக்கம் தருகின்றது.
நோவாவின் கப்பலின் உள்ளே நிழல்படங்கள் எடுக்க தடைச் செய்யப்பட்டுள்ளதால், வெளிப்புறக் காட்சிகளை எடுத்து பதிவேற்றியுள்ளேன். எனது நிழல் படக்கருவி தரமானதாக இல்லை என்பதால் படங்கள் சுமராகவே உள்ளன. நிழப் படங்களை சொடுக்கி பெரிதாகப் பார்க்கலாம்.
நிழல் படங்கள்
--------------------------------------------------------------------------
மேலும் விபரங்களை நோவாவின் பேழை அதிகாரப்பூர்வத் தளத்தில் பாருங்கள்
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
4 comments:
படங்களுடன் அது தொடர்பான தகவல்களும் அசத்தல்
வாருங்கள் கோவி கண்ணன்! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
அற்புதமான விருப்பு வெறுப்பற்ற தொகுப்பும் வர்ணனையும் அழகிய படங்களும் மனதைக் கொள்ளைக் கொண்டது;
நோவா தாத்தா இன்றைக்கு இருந்தால் இதுபோலவே அவரும் செய்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது;பாராட்டுக்கள்..!
வணக்கம் chillsam!
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி
Post a Comment