முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Tuesday, February 9, 2010

ஹொங்கொங் வரலாறு

ஹொங்கொங் அல்லது ஹாங்காங் இது சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் (Hong Kong Special Administrative Region - HKSAR) இரண்டில் ஒன்றாகும். மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் இது சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதியானாலும், “ஒரு நாடு இரண்டு கொள்கைகள்” எனும் அடிப்படையில் ஹொங்கொங் தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், பாதை விரிவாக்க அபிவிரித்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளாகக் கொண்டுள்ளது. அத்துடன் நில எல்லைகளையும் கடல் எல்லைகளையும் கூட கொண்டுள்ளது. மக்கள் தொகையைப் பொருத்த மட்டில் உலகில் மக்கள் நெரிசல் மிகு இடங்களில் ஒன்றாகவே ஹொங்கொங் விளங்குகின்றது.

இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் வானுயர் கட்டிடங்கள், மாடி மனைகள், அதிவேக பாதைகள், திகைக்க வைக்கும் மேம் பாலங்கள், அழகியப் பூங்காக்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளின் பட்டியலில் ஹொங்கொங்கும் முதன்மையில் திகழ்கின்றது. இந்நாட்டை "ஆசியாவின் உலக நகரம்" (Asia's World City) என செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

எல்லைகள்
--------------------------------------------------------------------------
இதன் எல்லைகளாக முத்து ஆற்றின் முகத்துவாரம் (Pearl River Delta) கிழக்காகவும், தென்சீனாவின் குவாங்தொங் மாவட்டத்தை வடக்காகவும், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தென் சீனக்கடலையும், 61 கிலோ மீட்டர் தொலைவில் மக்காவ்வையும் அமைவிடமாக கொண்டுள்ளது.

ஹொங்கொங் பெயர் காரணம்
--------------------------------------------------------------------------
"ஹொங்கொங்" எனும் பெயர் கண்டோனீஸ் அல்லது ஹக்கா (Cantonese or Hakka) எனும் சீன மொழிகளில் ஒன்றில் இருந்தே உருவானதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் "ஹொங்கொங்" எனும் ஒலிப்புக்கான கண்டோனீஸ் மொழியின் பொருள் "நறுமணம் வீசும் துறைமுகம்" (Fragrant Harbour) என்பதாகும்.

1842 ஆம் ஆண்டிற்கு முன்பு தற்போது "எபர்டீன்" (Aberdeen) என்றழைக்கப்படும் இடத்திற்கும், "அப் லெய் ச்சாவ்: (Ap Lei Chau) எனும் குட்டித்தீவுக்கும் இடையிலான சிறிய குடா பகுதியை குறிக்கும் ஒரு பெயராகவே "ஹொங்கொங்" என அப்பகுதியில் வசித்து வந்த மீனவர்கள் தம் பேச்சு வழக்கில் பயன்படுத்தினராம். இந்த சிறிய குடா பகுதியே பிரித்தானிய கப்பற் படையினருக்கும் இத்தீவின் பூர்வக் குடிகளான மீனவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது. சீனாவின் முத்து ஆற்றின் முகத்துவாரமாகவும், (Pearl River Delta) முத்து ஆற்றின் நன்னீர் உற்புகும் கடல் பகுதியாகவும் இக்கடல் பறப்பு அமைந்திருந்ததால் இக்கடலின் நீர் சுவையானதாகவும் நறுமணமுடையதாகவும் இருப்பதாக மீனவர்களால் கூறப்படுகின்றது. அதனாலேயே அவர்கள் இக்கடல் பகுதியை "ஹொங்கொங்" என்று அழைத்தனராம்.

அதன் பின் பிரித்தானியரின் ஆட்சியின் பொழுது ஹொங்கொங் தீவுப்பகுதியையும் அதனை அண்டிய கடல் பகுதியையும் அழைக்கும் பெயராக இது மாற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து . . . மேலும்>>>

நிலப் பரப்பளவு
--------------------------------------------------------------------------
ஹொங்கொங்கின் ஆட்சி நிலப்பரப்பை மூன்று பிரதானப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று ஹொங்கொங் தீவு பகுதியாகும். இதன் நிலப் பரப்பின் அளவு 81 கிலோ மீட்டர்களாகும்.

இரண்டாவது கவ்லூண் பிரதேசப் பகுதியாகும். இதன் நிலப் பரப்பளவு 47 கிலோ மீட்டர்களாகும்.

மூன்றாவது புதிய அரசக் கட்டுப்பாட்டு பகுதி (New Territory) என அழைக்கப்படும், தென் சீனாவுடன் ஒட்டிய தீபகற்ப நிலப்பரப்பும் அதனை சூழமைந்துள்ள 262 குட்டித் தீவு தொகுதிகளையும் உள்ளடக்கியப் பிரதேசமாகும். இதன் நிலப் பரப்பளவு 976 கிலோ மீட்டர்களாகும்.

இந்த மூன்று பிரிவுகளையும் சேர்த்து, ஹொங்கொங்கின் மொத்த நிலப் பரப்பளவு 1104 கிலோ மீட்டர்களாகும். இது சீனப் பெருநாட்டின் 10000/1 நில அளவை விட குறைவானதாகும். இலங்கையின் நிலப்பரப்பளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 60/1 நில அளவு மட்டுமேயாகும். இன்னும் கூறப்போனால் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலப்பரப்பளவையும் விட குறைவான அளவே ஹொங்கொங் ஆட்சியின் முழு நிலப்பரப்பளவுமாக உள்ளது.

(இருப்பினும் ஹொங்கொங்கின் நிலப்பரப்பளவு காலத்திற்கு காலம் கூடிக்கொண்டிருக்கின்றது. எப்படி என்று தெரியுமா? சில சிறிய தீவுகளை பெரு நிலப்பரப்போடு இணைத்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சில தீவுகளை ஒன்றினைக்கும் திட்டங்கள். கடல் பரப்பை செயற்கையாய் நிரப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் போன்றவைகளால் ஆகும்.

ஹொங்கொங் வரலாறு
--------------------------------------------------------------------------
வரலாற்று ரீதியாக ஹொங்கொங் ஒரு மீனவக் கிராமமாகும். இன்று ஹொங்கொங் என்றழைக்கப்படும் தீவும், அதன் அண்மித்த தீவுத்தொகுதிகளும், கவ்லூன் நிலப்பரப்பும் மலைத்தொடர்களாகவும், மலைக்குன்றுகளாகவுமே அன்று காட்சியளித்துள்ளன. அதன் அடிவாரத்தில் ஆங்காங்கே சில மீனவக்குடில்கள் மட்டுமே இருந்துள்ளன.

இந்த மீனவக் கிராமங்கள் 1841 ஜனவரி 26 ஆம் நாள் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து 1842 ஆகஸ்ட் 29 ம் நாள் ஹொங்கொங் தீவை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு குடியேற்ற நாடாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1984 இல் சீனாவும் பிரித்தானியாவும் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின் படி 1997 யூலை 1 ஆம் நாள் பிரித்தானியா ஹொங்கொங்கை சீனாவிடம் மீள்கையளித்தது. அன்றிலிருந்து "சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதி" (Hong Kong Special Administrative Region of the People's Republic of China) என அழைக்கப்படுகின்றது... மேலும்>>>

சிறப்பு நிர்வாக ஆட்சி முறைமை
--------------------------------------------------------------------------
பிரித்தானிய சீன கூட்டறிக்கையின் படி "ஒரு நாடு இரண்டு கொள்கைகள்" எனும் அடிப்படையில் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்கான அதிகூடிய தன்னாட்சி அதிகாரங்களை சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சீனா சோசலிச கொள்கைகளைக் கொண்டிருந்தப் போதும், ஹொங்கொங் பிரித்தானிய ஆட்சி முறைமையில் தொடர்ந்து இருந்துவந்த முதலாளித்துவ கொள்கையின் அடிப்படையில் ஆட்சியை தொடர அனுமதித்தல் ஆகும்.

அதேவேளை இன்னுமொரு உடன்படிக்கையான "சினோ-பிரித்தானியா கூட்டு பிரகடனத்தின் படி (Sino-British Joint Declaration) 1997 லிருந்து 2047 வரையில் அதாவது 50 ஆண்டுகளுக்கு ஐக்கிய இராச்சிய சட்டத்திட்டத்திற்கு அமைவான ஆட்சி முறை ஹொங்கொங்கில் நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. அதன்படி ஹொங்கொங் ஐக்கிய இராச்சிய ஆட்சிக்கு அமைவான அரசியல், ஆட்சி அதிகாரங்கள், சட்டத்திட்டங்கள், காவல் துறை, நில எல்லை, கடல் எல்லை, நாணயம், சுங்கக்கொள்கை, குடிவரவு குடியகல்வு சட்டங்கள், வெளிநாட்டு பிரதிநிதித்துவம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. அக்கூட்டு பிரகடனத்தின்பபடி, ஹொங்கொங் 50 ஆண்டுகளுக்கு பிரித்தானியக் காலணி ஆதிக்கத்தின் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை, மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் போன்றவற்றிற்கு உறுதியளித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதன் வெளிவிவகார கொள்கைகள், எல்லை பாதுகாப்பு போன்றன சீன மத்திய அரசிடமே உள்ளது. குடிநீர், மின்சாரம் போன்றவைகள் சீனாவில் இருந்தே வழங்கப்படுகின்றன.

ஹொங்கொங் வாழ் மக்களை சீனர்கள் என்று அழைப்பதில்லை. இவர்களை ஹொங்கொங்கர் அல்லது ஹொங்கொங் மக்கள் என்றே அடையாளப்படுத்தப் படுகின்றது. சிலர் தம்மை சீனர் என்று அழைப்பதையும் விரும்புவதில்லை.

ஹொங்கொங்கின் ஆட்சி, நிறைவேற்று தலைமை அதிகாரியால் அரசமைக்கப்படுகின்றது. தற்போது டொனால்ட் செங் (Donald Tseng) அவர்கள் ஹொங்கொங் தலமை நிறைவேற்று அதிகாரியாக இருக்கின்றார். கண்டோனிஸ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஆட்சி மொழிகளாக உள்ளன. மேலும்>>>

மாவட்டங்கள்
--------------------------------------------------------------------------
ஹொங்கொங் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம் மூன்று பிரதான பகுதிகளிலும் 18 மாவட்டங்கள் உள்ளன. அவைகளாவன:

புதிய அரசக் கட்டுப்பாட்டுப் பகுதி (New Territories)

1. தீவுகள் மாவட்டம் (Islands District)
2. குவை சிங் மாவட்டம் (Kwai Tsing District)
3. வட மாவட்டம் (North District)
4. ஸய் குங் மாவட்டம் (Sai Kung District)
5. ஷா டின் மாவட்டம் (Sha Tin District)
6. டயி போ மாவட்டம் (Tai Po District)
7. ஷுன் வான் மாவட்டம் (Tsuen Wan District)
8. ச்சுன் மூன் மாவட்டம் (Tuen Mun District)
9. யுங் லோங் மாவட்டம் (Yuen Long District)

கவ்லூண் மற்றும் புதிய கவ்லூண் பகுதி (Kowloon)

10. கவ்லூண் நகர மாவட்டம் (Kowloon City District)
11. குன் டொங் மாவட்டம் (Kwun Tong District)
12. ஷம் ஸுய் போ மாவட்டம் (Sham Shui Po District)
13. வொங்க் டயி சின் மாவட்டம் (Wong Tai Sin District)
14. யவ் சிம் மொங் மாவட்டம் (Yau Tsim Mong District)

ஹொங்கொங் தீவு (Hong Kong Island)

15. (ஹொங்கொங் தீவின்) மத்திய மற்றும் மேற்கு மாவட்டம்
16. (ஹொங்கொங் தீவின்) கிழக்கு மாவட்டம்
17. (ஹொங்கொங் தீவின்) தென் மாவட்டம்
18. (ஹொங்கொங் தீவின்) வன்ச் சாய் மாவட்டம் (Wan Chai District)

மக்கள் தொகை
--------------------------------------------------------------------------
ஹொங்கொங் மக்கள் தொகை 1842 பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் பொழுது கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர் மட்டுமே இருந்துள்ளனர். இத்தொகை வெவ்வேறு கட்டங்களில் அதிகரிக்கத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மத்தியில் ஹொங்கொங்கின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6,708,389 பேர்கள் என்றும் 2008 ஆம் ஆண்டு இறுதியில் மக்கள் தொகை 7,018,636 என்றும் அறிய முடிகின்றது. இதில் 95% வீதமானோர் கண்டோனீஸ் மொழி பேசும் சீனர்களாவர். 5% வீதமானோரே ஏனையவர்கள். பெரும்பான்மையானோரால் பேசப்படும் மொழி கண்டோனிஸ். (சீன மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி). தவிர ஆங்கிலமும் ஓரளவு பேசப்படுகின்றது. தற்போது சீனாவில் பேசப்படும் பிரதான மொழியான "மெண்டரின்" மொழியும் பேசப்படுவது அதிகரித்து வருவதாக அறியமுடிகின்றது. இவர்களைத் தவிர பிரித்தானியர், அமெரிக்கர், கனடியர், ஐரோப்பியர், அவுஸ்திரேலியர்,யப்பானியர், கொரியன், வியட்நாமியர், இந்தியர், பாக்கிஸ்தானியர், நேபாளவர், பிலிப்பீனீஸ், இந்தோனீசியர், தாய்லாந்தவர் உற்பட பல்லினத்தவரும் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வரையிலான தமிழர்களும் நிரந்தரக் குடியுரிமைப் பெற்றவர்களாக இங்கே வாழ்கின்றனர். மேலும்>>>

இதனைத் தவிர ஹொங்கொங் நாட்டில் தொழில் வீசா பெற்று வீட்டுப் பணிப்பெண்களாக சேவை செய்பவர்கள் கிட்டத்தட்ட 275,000 உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 140.000 (53.11% வீதம்) பிலிப்பின் பெண்களாகும். 120,000 (43.15% வீதம்) இந்தோனேசியா பெண்களாகும். தாய்லாந்து 4,000 பேர் வரையில் இருக்கலாம். கிட்டத்தட்ட 3,500 இலங்கையர்கள், கிட்டத்தட்ட 4,500 இந்தியர்கள். ஏனைய நாட்டுப் பணிபெண்கள் 4,000 வரை இருப்பதாகவும் அறியப்படுகின்றது. (தவிர வீசா அனுமதியின்றி சட்டவிரோத தொழிலாளர்களாகவும் 7000 அளவில் இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.) மேலும்>>>

தரையமைவு
--------------------------------------------------------------------------
ஹொங்கொங்கின் தரைத் தோற்றம் இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளும் ஆனது. சமதரைப் பிரதேசங்கள் இங்கெ எங்கும் இருக்கவில்லை. ஆனால் மலையடிவாரங்களை செதுக்கிச் செதுக்கி கடல் பரப்பை செயற்கையாய் நிரப்பியும், பல மலைக் குன்றுகளை அப்படியே தரை மட்டமாக்கியும் ஹொங்கொங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது. பல தீவுகள் முற்றிலுமாக தரைமட்டம் ஆக்கப்பட்டு பெரு நிலப்பரப்போடு இணைக்கப்பட்டுள்ளன. சில இரண்டு மூன்று தீவுகள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளன. (எதிர்காலத்தில் ஹொங்கொங்கின் தீவுகளின் எண்ணிக்கை மேலும் குறையலாம்.) ஹொங்கொங் தீவு மற்றும் கவ்லூண் கடலோரக் கட்டிடங்கள் அவ்வாறு கடலை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களால் எழுந்தவைகளே ஆகும்.

தற்போதும் கடலை நிரப்பி கட்டிடங்களை எழுப்பும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஹொங்கொங் மலைத்தொடர்களும் குன்றுகளும் இயற்கையிலேயே கற்பாறைகளால் ஆனது. நிலத்தின் சில அடிகளுக்கு கீழ் வெண் கற்பறைகளாவே ஹொங்கொங்கின் நிலம் அமையப் பெற்றுள்ளது. இவ்வாறான தரை அமைப்பே மிக நெருக்கமாக வானுயர் கட்டிடங்களின் பாதுகாப்பானதும் உறுதியானதும் அத்திவாரத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றது. கடலுக்கடி பகுதிகளும் கற்பாறைகளாகவே இருப்பதை சில வரைப்படங்களூடாக அறியக்கூடியதாக உள்ளது. பல வானலாவிகளின் வானுயர்ந்து நிற்க, அதன் அத்திவாரங்களின் கீழ் அல்லது அத்திவாரங்களை ஊடறுத்து நிலத்திற்கடியில் நீண்ட தொடரூந்து பாதைகள் அமைப்பதற்கும் ஏற்புடையதாக இருக்கின்றது. கடலுக்கு அடியிலான பாரிய சுரங்கப் பாதைகளும் அமைக்கப் பட்டுள்ளன. மேலும்>>>

போக்கு வரத்து சேவைகள்
--------------------------------------------------------------------------
ஹொங்கொங் பொது போக்கு வரத்து சேவை உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த போக்கு வரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. இது அரச மற்றும் தனியார் சேவைகளையும் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 90%க்கு மேற்பட்ட அன்றாடப் பயணங்கள் (11 மில்லியன்) பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றது. இது உலகிலேயே மிக அதிகமான அளவு ஆகும். "ஒக்டோப்பஸ் அட்டை" எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் முறை பொது போக்குவரத்து சேவையில் பயன்படுகின்றது.

உலகின் அதி நவீன சிறந்தப் போக்கு வரத்து சேவைகளில் ஒன்றான நிலத்தடி துரிதக்கதி மின் தொடருந்து சேவை (MTR) நகரின் 150 தொடருந்தகங்களைக் கொண்டு அன்றாடம் 3.4 மில்லியன் மக்களுக்குச் சேவை புரிகின்றது. 1904 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் "டிராம் வண்டிச் சேவை" ஹொங்கொங் தீவின் வடக்குப் பகுதிகளில் உள்ளது. இரண்டு தட்டுகளைக் கொண்ட டிராம் வண்டி சேவை உலகில் தற்போது இது ஒன்று மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் பேரூந்து, சிற்றூந்து, மகிழூந்துச் சேவை, ஸ்டார் பெரி (வள்ளம்) படகு சேவை, தீவுகளுக்கான அதிவேக படகு சேவை, சொகுசு படகு சேவை, போன்றனவும் ஹொங்கொங் போக்கு வரத்து சேவையில் உள்ளன. மேலும்>>>

சமயம்
-------------------------------------------------------------------------
ஹொங்கொங் ஒரு சமயச் சுதந்திர நாடாகும். இங்கு பல்வேறு மதப்பிரிவினரும் உள்ளனர். சமயமற்றவர்களும் கனிசமானோர் உள்ளனர். இருப்பினும் அதிகமானோர் பௌத்தம், கன்பியூசியானிசம், டாவோஸ்ம் போன்றவர்களாகும். ஆனாலும் சமய வழிப்பாட்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு சமூகமாகவே இவர்கள் உள்ளனர். மற்றும் கிருஸ்தவம், இஸ்லாம், இந்து, சீகிஸம், ஜுடாயிசம் போன்ற சமய வழிப்பாடுகளைக் கொண்டோரும் உள்ளனர். சில சமய சார்பான பாடசாலைகளும் சமூக சேவை நிருவனங்களும் உள்ளன. இதில் கன்பியூசியானிசம் மதம் சீனர்களின் பழமையான மதம் என்கின்றனர். இதன் வழிப்பாட்டு முறை இந்து மதத்தின் வழிப்பாட்டு முறைகளை ஒத்தது போன்றே இருக்கின்றது. நவக்கிரக வழிப்பாட்டிற்கு ஒத்த வழிப்பாட்டு முறையும் உள்ளன. கற்களை நட்டு வணங்குதல், மரத்தடி வழிப்பாடுகள் போன்றனவும் இவர்களிடம் உண்டு. சில இடங்களில் பிள்ளையார் சிலைகளையும் காணலாம். கிட்டத்தட்ட 600 நூறுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய வெங்கலத்திலான புத்தர் சிலை ஹொங்கொங்கிலேயே உள்ளது. அமெரிக்கர், கனடியர், ஐரோப்பியர் அதிகம் வாழும் பகுதிகளில் கிருஸ்தவ மதங்களின் செல்வாக்கு உள்ளது. பல கிருஸ்தவ தொண்டு நிறுவனங்களும் உள்ளன. இஸ்லாம் பள்ளி வாசல்களும் இருக்கின்றன.

இரண்டு இந்து மத வழிப்பாட்டுத் தலங்களும் உள்ளன. மேலும்>>>

குறிப்பு:
இவ்விடுகையில் ஹொங்கொங் வரலாற்றினை சுருக்கமாகவே இடப்பட்டுள்ளது. இதில் மேலும்>> என கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பின் ஊடாக சென்று மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் ஹொங்கொங் தொடர்பான தகவல்களை விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளேன். பார்க்க

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

5 comments:

Unknown said...

ஹாங்காங் வரலாறை அழகாக எழுதியிருக்கீங்க அருண். வாழ்த்துக்கள்

HK Arun said...

வாழ்த்துக்களுக்கு நன்றி JAEHAR ALI நண்பரே

Ashok Jaiswal said...

Hong Kong is very open economy and there are many indians living there. The visa regulations are also very flexible and allows individuals to setup business there and get visa, can see more details at Investment Visa in Hong Kong

http://writersamas.blogspot.com said...

அருமையான கட்டுரை arun

http://writersamas.blogspot.com said...

அருமையான கட்டுரை hk arun